3 லாரிகள் 2 கார்கள் அடுத்தடுத்து மோதல்; 5 பேர் படுகாயம்
ஆரல்வாய்மொழியில் லாரியின் டயர் வெடித்ததால், அடுத்தடுத்து 3 லாரிகள், 2 காா்கள் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழியில் லாரியின் டயர் வெடித்ததால், அடுத்தடுத்து 3 லாரிகள், 2 காா்கள் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
வாகனங்கள் மோதல்
நெல்லையில் இருந்து நேற்று சிமெண்டு பாரம் ஏற்றிய ஒரு லாரி நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியின் பின்னால் இரும்பு பொருட்களை ஏற்றிய மற்றொரு லாரியும் வந்து கொண்டிருந்தது. ஆரல்வாய்மொழி ஆரோக்கிய நகர் பகுதியில் வந்தபோது, எதிரே நாகர்கோவிலில் இருந்து காவல்கிணறு நோக்கி செங்கல் ஏற்றுவதற்காக ஒரு லாரி வந்தது.
அப்போது, திடீரென சிமெண்டு ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்தது. இதனால் அது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குமிங்கும் தாறுமாறாக ஓடி எதிரே செங்கல் ஏற்ற சென்ற லாரி மீது மோதியது. அதே நேரத்தில் பின்னால் வந்த இரும்பு பொருட்களை ஏற்றிய லாரியும், 2 லாரிகள் மீது ேமாதியது.
5 பேர் காயம்
அப்போது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி சென்ற கார், சாலையோரம் நின்ற மற்றொரு கார் மீதும் லாரிகள் மோதியது. இதனால் அந்த பகுதியில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரை சேர்ந்த சுந்தரம் (வயது 65), அவரது மகள் மேரி ஷகிலா (45), மேரி ஷகிலாவின் மகன்கள் பெனடிட் (13), ஷ்யாம் (20) மற்றும் உறவினர் குமார்(43) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் நின்றவர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story