தண்டவாளத்தில் சிக்கியதால் காலை துண்டித்து ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் மீட்பு
உப்பள்ளியில் தண்டவாள கம்பிகள் இடையே சிக்கியதால் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் காலை துண்டித்து மீட்கப்பட்டார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
ஓய்வு பெற ரெயில்வே ஊழியர்
கர்நாடக மாநிலம் தார்வார் டவுனை சேர்ந்தவர் பாபுசாப் பாகேவாடி (வயது 71). இவர் ரெயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்த நிலையில் நேற்று மாலை உப்பள்ளி தேஜஸ்வி நகர் படாவனே பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ரெயில்வே ஊழியர்கள் ரெயிலை மாற்றுப்பாதையில் விடுவதற்காக தண்டவாளத்தை மாற்றி அமைத்துள்ளனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக பாபுசாப்பின் கால் தண்டவாள கம்பிகளுக்கு இடையில் வசமாக சிக்கிக் கொண்டது.
காலை வெட்டி எடுத்து மீட்பு
இதனால் அவரால் தண்டவாளத்தில் இருந்து காலை எடுக்க முடியாமல் அவதிப்பட்டார். நீண்ட நேரமாக அந்தப் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.
மேலும் சம்பவம் பற்றி அவர் ரெயில்வே ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தனது செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். உடனே அங்கு விரைந்து வந்த அதிகாரகளும், ஊழியர்களும் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவரது கால் தண்டவாளத்தில் சிக்கி மிகவும் சிதைந்துபோய் ரத்தம் வழிந்தபடி இருந்தது. இதையடுத்து அந்த வழியாக வரும் ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு பாபுசாப் உயிரை காக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர். அதாவது அவரது காலை துண்டித்து அவரை மீட்க முடிவு செய்தனர். அதன்படி தண்டவாளத்தில் சிக்கிய கால் வெட்டி துண்டிக்கப்பட்டது.
பரபரப்பு
பின்னர் அவர் சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக உப்பள்ளி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
Related Tags :
Next Story