குடிநீர் திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்


குடிநீர் திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 July 2021 2:00 AM IST (Updated: 2 July 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் நடைபெறும் குடிநீர் திட்டப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நடைபெறும் குடிநீர் திட்டப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அமைச்சர் மனோதங்கராஜ்
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வாயிலாக நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் ரூ.251.43 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக   புத்தன் அணையின் அருகே பரளியாற்றில் நீர் எடுக்கும் கிணறு மற்றும் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, கிருஷ்ணன்கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, 23 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட உள்ளது. பின்னர் இந்த குடிநீர் புதிதாக பதிக்கப்படவுள்ள 420.612 கி.மீ. குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படவுள்ளது.
அழகியபாண்டியபுரம்  கூட்டுக்குடிநீர் திட்டம்
இந்த திட்டத்தின் கீழ் 85,000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். தற்போது 83 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. வருகிற 16-ந் தேதி முதல் முறையான குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 
துரிதமாக முடிக்க உத்தரவு
இரணியல் பேரூராட்சி மற்றும் 374 வழியோர குடியிருப்புகளுக்காக ரூ.174 கோடி மதிப்பில் நடைபெறும் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இதுவரை 85 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குழித்துறை நகராட்சிக்குக்குட்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிட குழித்துறை ஆற்று நீரை நீராதாரமாகக் கொண்ட புதிய குடிநீர் அபிவிருத்தித்திட்டத்தின்கீழ் ரூ.30.94 கோடி மதிப்பில் நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 12 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் நிறைவேறும் போது இன்னும் அதிகமான பொதுமக்கள் பயனடைவார்கள். எனவே இந்த திட்டங்களை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
பாதாள சாக்கடை திட்டம்
நாகர்கோவில் மாநகராட்சி பாதாளச் சாக்கடைத்திட்டம் ரூ.76.04 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 96 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளை துரிதமாக முடித்து திட்டத்தினை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.
கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் கதிரேசன், பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன், சங்கர், ராஜேந்திரன், காந்தி, ஹரிகோவிந்த், ரெஜிலா, உதவிப்பொறியாளர் ராஜேஷ், இளநிலை பொறியாளர் தாணப்பன், நாகர்கோவில் மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story