பெங்களூரு எலகங்காவில் அமைந்துள்ள அதிநவீன கொரோனா ஆஸ்பத்திரியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு


பெங்களூரு எலகங்காவில் அமைந்துள்ள அதிநவீன கொரோனா ஆஸ்பத்திரியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு
x

பெங்களூரு எலகங்காவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கொரோனா ஆஸ்பத்திரியை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெங்களூரு:

சுகாதார வசதிகள்

  போயிங் விமான உற்பத்தி நிறுவனம் பெங்களூரு எலகங்காவில் 100 படுக்கைகளுடன் ஆக்சிஜன் வசதி கொண்ட அதிநவீன கொரோனா ஆஸ்பத்திரியை அமைத்துள்ளது. இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அந்த ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். தனியார் நிறுவனங்கள் சமூக பொறுப்பு சட்டத்தின் கீழ் இந்த ஆஸ்பத்திரியை அந்த போயிங் நிறுவனம் அமைத்துள்ளது.

  கர்நாடக மின்சார கழகம் அரை ஏக்கர் நிலத்தை அந்த நிறுவனத்திற்கு ஆஸ்பத்திரி அமைக்க ஒதுக்கியது. "டாக்டர்ஸ் பார் யு" அமைப்பு அந்த ஆஸ்பத்திரிக்கு தேவையான டாக்டர்கள் மற்றும் சுகாதார வசதிகளை செய்து கொடுக்கிறது. இந்த அதிநவீன ஆஸ்பத்திரியை கட்டமைக்கும் பணிகள் 20 நாட்களில் முடிக்கப்பட்டதற்கு நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.

ஆக்சிஜன் படுக்கைகள்

  இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கொரோனாவுக்கு எதிரான போரில் அரசுடன் தனியார் நிறுவனங்கள் கைகோர்த்து இருப்பது பாராட்டுக்குரியது. இந்த ஆக்சிஜன் வசதி கொண்ட ஆஸ்பத்திரியை நிறுவிய போயிங் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10 படுக்கைகளுக்கு ஐ.சி.யு. வசதியும், 20 படுக்கைகளுக்கு எச்.டி.யு. வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் கண்காணிப்பு அரங்கம், மருந்தகம், ஆய்வகம், ஓய்வறைகள் போன்ற வசதியும் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

  இந்த ஆய்வின்போது கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், வணிக வரித்துறை கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story