இடி, மின்னலுடன் பலத்த மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூர்:
இடி, மின்னலுடன் மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
நேற்றும் பகல் நேரத்தில் வழக்கம்போல் கொளுத்திய வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் மழை எப்போது பெய்யும் என்ற ஏக்கத்தில் பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்த்து காத்திருந்த சூழ்நிலையில், பெரம்பலூரில் நேற்று இரவு 7.20 மணியளவில் திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேரம் செல்லச்செல்ல பலத்த மழை கொட்டியது. அப்போது பலத்த காற்றும் வீசியது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மரக்கிளை முறிந்து, அங்குள்ள வேன் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 3 வேன்கள் மீது விழுந்தது.
குளம்போல் தேங்கியது
இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழைநீர் சாலையில் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
மழை பெய்த போது மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாயினர். ஆனாலும் திடீரென்று பெய்த மழையால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story