காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நடக்கிறது - மந்திரி ஈசுவரப்பா தாக்கு
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி அழிந்து வரும் நிலையில், அக்கட்சிக்குள் முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நடப்பதாக மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
பெங்களூரு:
கர்நாடக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பின்னுக்கு தள்ளுகிறார்கள்
கர்நாடகத்தில் காங்கிரஸ் அழிந்து வருகிறது. அதனால் அடுத்த சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரசில் பலத்த போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா, டி.கே.சிவக்குமார், எம்.பி.பட்டீல், பரமேஸ்வர், தன்வீர்சேட் உள்ளிட்டோர் அந்த போட்டியில் உள்ளனர். எங்கள் கட்சியில், கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் வகையில் சிலர் கருத்து கூறுவது உண்மை தான். அதற்காக பா.ஜனதா ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்வது சரியல்ல.
நாட்டில் காங்கிரஸ் கட்சி எங்கே உள்ளது என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூகநீதி குறித்து பேசும் காங்கிரஸ் சாதிக்கு ஒரு முதல்-மந்திரியின் பெயரை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கட்டும். காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்கு பனிப்போர் நடந்து வருகிறது. இளைஞர் காங்கிரசிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. டி.கே.சிவக்குமாரை பின்னுக்கு தள்ளுகிறார்கள்.
கொரோனா பரவலை தடுக்க...
எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளை சேகரித்து கொண்டு எங்கள் கட்சியின் மேலிட பொறுப்பாளர் அருண்சிங் டெல்லி சென்றுள்ளார். கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக எடியூரப்பா கூறியுள்ளார். 3 பேர் கட்சிக்கு எதிராக பேசி வருகிறார்கள். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நான் முதல்-மந்திரி பதவிக்கு தகுதியானவன் இல்லையா என்று நீங்கள் கேட்கிறீர்கள். யாருக்கு, எந்த நேரத்தில், எந்த பதவி வழங்க வேண்டும் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். கர்நாடகத்தில் கிராமப்புறங்களில் கொரோனா பரவலை தடுக்க கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டது. பல்லாரி உள்பட சில மாவட்டங்களில் 50 வீடுகளுக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. இதை மத்திய அரசே பாராட்டியது.
திடக்கழிவு மேலாண்மை
நரேகா திட்டத்தின் கீழ் 13 கோடி வேலை நாட்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை 4.40 கோடி வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. ஜலஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் குடிநீர் இணைப்புகளுக்கு கட்டணத்தை கிராம பஞ்சாயத்துகளே முடிவு செய்யும். ஒரு வீட்டிற்கு மாதம் ரூ.100 கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. 1,800 கிராம பஞ்சாயத்துகளில் கழிவு கிடங்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் சில பஞ்சாயத்தில் குப்பை கிடங்கு அமைக்க நிலம் கிடைக்கவில்லை. நரேகா திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களில் 22 லட்சம் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி ஈசுவரப்பா கூறினார்.
Related Tags :
Next Story