மீன்களுக்கு விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம்
தடைகாலம் முடிந்து 76 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் மீன்பாடு, விலை இல்லாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ராமேசுவரம்,
தடைகாலம் முடிந்து 76 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய ராமேசுவரம் மீனவர்கள் மீன்பாடு, விலை இல்லாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தடைகாலம்
மீன்பிடி தடைகாலம் முடிந்து ராமேசுவரம் மண்டபம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.
வழக்கமாக தடைகாலம் முடிந்து ஜூன் மாதம் 15-ந்தேதி முதல் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வது வழக்கம். ஆனால் முழு ஊரடங்கு காரணமாக 76 நாட்களுக்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 700-க்கும் அதிகமான விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் நேற்று காலை இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட பலவகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள்.
ஒவ்வொரு விசைப்படகில் மீனவர்கள் அதிகம் எதிர்பார்த்து மீன்பிடிக்கச் சென்ற இறால் மீன்கள் 200 லிருந்து 250 கிலோ வரையிலும் கிடைத்திருந்தன. குறிப்பிட்ட சில படகுகளில் மட்டும் இறால் மீன்கள் 400 கிலோ வரையிலும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டு ஒவ்வொரு விசைப்படகிலும் கணவாய் மீன்கள் சுமார் 200 கிலோ வரையிலும் நண்டு 100 கிலோ வரையிலும் மற்றும் சங்காயம் 500 கிலோ முதல் ஒரு டன் வரையிலும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததாலும் மீன்களுக்கு சரியான விலை நிர்ணயம் செய்யப்படாததாலும் ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
விலை இல்லை
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது:- உலக நாடுகளில் எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தான் அதிக விலையில் 1லிட்டர் டீசல் 95 ரூபாய் என உள்ளது. உற்பத்தி செய்யப்படக்கூடிய அனைத்து வகையான பொருட்களுக்கும் உற்பத்தியாளர்களை விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். உயிரை பணயம் வைத்து கஷ்டப்பட்டு கடலுக்குள் சென்று மீன் பிடித்து வரும் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால் மீன்களுக்கு மட்டும் மீனவர்களுக்கு எதிர்பார்த்த விலை கிடைப்பதில்லை.
ஏற்றுமதி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து சிண்டிகேட் அமைத்து மிகவும் குறைந்த விலையை நிர்ணயம் செய்து மீனவர்களிடம் இருந்து இறால் மீன்களை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த இறால் மீன்களுக்கு இதுவரையிலும் சரியான விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.இது ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைமைதான் நீடிக்கின்றது. இதுகுறித்து பலமுறை மத்திய-மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தும் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய இறால் மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகுந்த வேதனையாக உள்ளது. 76 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்கச் சென்று வந்தும் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களுக்கு இதுவரையிலும் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலையை நிர்ணயம் செய்யவில்லை.
போராட்டம்
வழக்கமாக இறால் மீன்களுக்கு மட்டும் தான் சரியான விலை கிடைக்காமல் இருந்து வரும் நிலை இருந்தது. தற்போது இந்த ஆண்டு கணவாய்மற்றும் நண்டுகளுக்கும் சரியான விலை கிடைக்கவில்லை. மீன்களுக்கு நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story