அனகாபுத்தூரில் ஏ.டி.எம். மையத்துக்குள் தலையில் காயத்துடன் முதியவர் பிணம் - கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை


அனகாபுத்தூரில் ஏ.டி.எம். மையத்துக்குள் தலையில் காயத்துடன் முதியவர் பிணம் - கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 2 July 2021 12:03 PM IST (Updated: 2 July 2021 12:03 PM IST)
t-max-icont-min-icon

அனகாபுத்தூரில் ஏ.டி.எம். மையத்துக்குள் தலையில் காயத்துடன் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தின் உள்ளே 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது.

ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள், முதியவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள், சங்கர்நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த ஏ.டி.எம். மையத்தின் வெளியே கேட்பாரற்று நின்ற இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஏ.டி.எம். மையத்தில் பிணமாக கிடந்த முதியவர், அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் (வயது 65) என்பது தெரியவந்தது.

ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வந்தபோது அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. அவரது தலையின் பின்பகுதியில் காயம் இருப்பதால் மர்மநபர்கள் அவரை தலையில் அடித்துக்கொலை செய்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனரா? அல்லது ஏ.டி.எம். மையத்தில் அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்தபோது தலையில் காயம் ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏ.டி.எம். மையத்தின் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story