சென்னையின் முதல் மேம்பாலம் என்ற சிறப்பை பெற்ற அண்ணா மேம்பாலம் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடியது


சென்னையின் முதல் மேம்பாலம் என்ற சிறப்பை பெற்ற அண்ணா மேம்பாலம் தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடியது
x
தினத்தந்தி 2 July 2021 12:07 PM IST (Updated: 2 July 2021 12:07 PM IST)
t-max-icont-min-icon

சென்னையின் முதல் மேம்பாலம் என்ற சிறப்பை பெற்ற அண்ணா மேம்பாலம் நேற்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடியது.

சென்னையின் அடையாளமாக விளங்கும் அண்ணா சாலை 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தலைமைச்செயலகம் முதல் கிண்டி வரை 15 கி.மீ. நீளத்திற்கு இந்த சாலை அமைந்திருக்கிறது. சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில், அண்ணா சாலை - நுங்கம்பாக்கம் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை - ஜி.என். செட்டி சாலைகள் சந்திக்கும் பகுதியில் மேம்பாலம் ஒன்றை கட்ட கடந்த 1971-ம் ஆண்டு திட்டமிடப்பட்டது. அதன்படி, ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 250 அடி நீளம், 48 அடி அகலத்தில் பிரமாண்ட மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கியது.

1969-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி இந்த மேம்பாலத்தை கட்ட உத்தரவிட்டார். சரியாக 21 மாதத்தில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி திறக்கப்பட்டது. அந்த மேம்பாலத்திற்கு அண்ணாவின் பெயரை அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி சூட்டினார். சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், இந்திய அளவில் கட்டப்பட்ட 3-வது மேம்பாலம், இந்தியாவிலேயே நீண்ட மேம்பாலம் என்று பல்வேறு சாதனைகளை சுமந்து வரும் அண்ணா மேம்பாலம், நேற்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடியது. இந்த மேம்பாலத்திற்கு அருகே நீண்ட காலமாக ஜெமினி ஸ்டூடியோ அமைந்திருந்ததால், ஜெமினி மேம்பாலம் என்றும் இன்றளவும் அழைக்கப்படுகிறது. அண்ணா மேம்பாலத்திற்கு பக்கத்தில், குதிரைப் பந்தயத்தை தடை செய்ததை நினைவுகூரும் வகையில் குதிரையை அடக்கும் மனிதனின் சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, இன்றைக்கு சென்னையில் எத்தனையோ மேம்பாலங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டாலும், சென்னையின் பாரம்பரிய அடையாளமாக அண்ணா மேம்பாலம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அடுத்த 2 ஆண்டுகளில் தனது பொன் விழாவையும் கொண்டாட இருக்கிறது.

Next Story