மளிகை கடையில் 500 ரூபாய் கள்ளநோட்டு மாற்ற முயன்றவர் கைது
மளிகை கடையில் 500 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகர் நேரு நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் முருகானந்தம். நேற்று இவரது கடைக்கு வந்த மர்மநபர், ரூ.500 நோட்டை மாற்ற முயன்றார். முருகானந்தம் அதை வாங்கி சோதித்து பார்த்தபோது கள்ளநோட்டு என தெரிந்தது.
உடனே முருகானந்தம் அந்த நபரை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். துரைப்பாக்கம் சிக்னல் அருகே அந்த நபரை விரட்டி பிடித்து துரைப்பாக்கம் கண்ணகி நகர் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர், நங்கநல்லூரை சேர்ந்த சிவராம கிருஷ்ணன் (வயது 50) என்பதும், அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவரிடம் கள்ளநோட்டுகளை வாங்கி கடைகளில் மாற்றி புழக்கத்தில் விட்டு வருவதும் தெரிந்தது. அவரிடம் இருந்து 500 ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் 7 நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராமகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story