தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 60 செல்போன்கள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 60 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை நேற்று உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 60 செல்போன்கள் மீட்கப்பட்டன. அவற்றை நேற்று உரிமையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஒப்படைத்தார்.
செல்போன் மீட்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகரன், அச்சுதன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அமைத்து உத்தரவிட்டார்.
அதன்படி சைபர் கிரைம் போலீசார் செல்போன்களின் பிரத்யேக ஐ.எம்.இ.ஐ எண்களை வைத்து செல்போன்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி ஏற்கனவே 223 செல்போன்களை மீட்டு உள்ளனர். தற்போது, மாவட்டம் முழுவதும் காணாமல் போன 60 செல்போன்களை கண்டுபிடித்து உள்ளனர்.
ஒப்படைப்பு
இதனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி உரிமையாளர்களிடம் வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் 4 கட்டமாக செல்போன்கள் மீட்கப்பட்டு உள்ளது. இதுவரை 283 செல்போன்களை மீட்டு, உரிமையாளர்களிடம் ஒப்படைத்து உள்ளோம். செல்போன்கள் அத்தியாவசியமாகி விட்டது. செல்போன் தொலைந்தால், நம் உடல் உறுப்பில் ஒன்றை இழந்தது போன்று பரிதவிக்கும் நிலை உள்ளது. செல்போன்களில் அனைத்து தகவல்களையும் சேகரித்து வைக்கிறோம். செல்போன்களில் தேவையற்ற படங்களை வைக்க வேண்டாம். ஒருவேளை செல்போன்கள் தொலைந்தால், சமூக விரோதிகளின் கைகளில் செல்போன் கிடைத்தால், அவர்கள் அந்த படங்களை சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தமான தகவல்களை மற்றொரு பேக்கஅப் வைத்துக் கொள்வது நல்லது. சிலர் தவறான தகவல்களை அனுப்பிவிட்டு, செல்போனில் அழித்து விடுவார்கள். அவ்வாறு அழித்தாலும், அந்த தகவலை மீண்டும் பெறும் வகையில் பல்வேறு செயலிகள் உள்ளன. ஆகையால் யாரும் செல்போனை தவறாக பயன்படுத்தக்கூடாது. செல்போன் ஒரு தகவல் சாதனம். அதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story