தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றங்களை விசாரிக்க தனிபோலீஸ் பிரிவு தொடக்கம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றங்களை விசாரிக்க தனியாக சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றங்களை விசாரிக்க தனியாக சைபர் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சைபர் கிரைம்
தமிழகம் முழுவதும் செல்போன் மற்றும் இணையதள பயன்பாடு அதிகரித்து உள்ளது. வெளியில் நடப்பது போன்று இணைதளத்திலும் பல்வேறு குற்றங்கள் நடந்து வருகின்றன. இதனால் போலீஸ் நிலையங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பான அதிக புகார்கள் வருகின்றன. இதைத் தொடர்ந்து சைபர் குற்றங்களை விசாரிப்பதற்காக தனியாக சைபர் குற்றப்பிரிவு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் தொடங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சைபர் பிரிவு இருந்தாலும், வழக்கு பதிவு போன்றவை கிடையாது. தற்போது சைபர் குற்றப்பிரிவில் மற்ற போலீஸ் நிலையங்களை போன்று வழக்கு பதிவு செய்து, உரிய விசாரணை நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய சைபர் கிரைம் பிரிவு கடந்த ஒருமாதமாக செயல்பட்டு வருகிறது. ஆகையால் சைபர் கிரைம் எனப்படும் கணினி வழி குற்றங்கள் மற்றும் தொலைந்த செல்போன்களை பற்றி புகார் அளிக்க போலீஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. உங்களது சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை நேரடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே புகார் அளிக்கலாம். ஏ.டி.எம் கார்டு எண் கேட்டு வரும் போலியான தொலைபேசி செய்தியை நம்பி பணத்தை இழந்தவர்கள், சமூக வலைதளங்களில் அவதூறான செய்திகள் பரப்புபவர்கள் மீது புகார் அளிக்கவும், இணையதளம் மூலமாக வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுபவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கலாம்.
குண்டர் சட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 81 பேர் இந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் இல்லங்களை சமூகநலத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து குழுவாக குழந்தைகள் இல்லங்களில் ஆய்வு மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story