மத்திய அரசு திட்டங்களை குறை கூறுவதா? காங்கிரஸ் கட்சியினருக்கு, எல்.முருகன் கண்டனம்


மத்திய அரசு திட்டங்களை குறை கூறுவதா? காங்கிரஸ் கட்சியினருக்கு, எல்.முருகன் கண்டனம்
x
தினத்தந்தி 2 July 2021 12:47 PM GMT (Updated: 2 July 2021 12:47 PM GMT)

மத்திய அரசு திட்டங்களை குறை கூறுவதா? காங்கிரஸ் கட்சியினருக்கு, எல்.முருகன் கண்டனம்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா முதல் அலையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை தேவையான உணவுப்பொருட்கள் வழங்குதல், நிதி உதவிகளை நேரடியாக வழங்குதல், சிறுவணிகர்கள் முதல் பெருவணிகர்கள் வரையும், சிறு-குறு தொழில் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் வரை கடன் உதவிகளை வழங்குதல், தொழிலாளர்களுக்கு சலுகைகள் என ரூ.20,96,000 கோடி ரூபாய்க்கு தற்சார்பு இந்தியா திட்டத்தை அறிவித்து, அதை வெற்றிகரமாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அதேபோன்று இப்போது 2-வது அலையிலும், மேலும் ரூ.6,10,000 கோடி தொகையை பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார். ஏற்கனவே தொடரப்பட்டு வரும் அவசர கால கடன் உதவி திட்டத்திற்கு மேலும் ரூ.1,50,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய வேலை வாய்ப்புகளை லட்சக்கணக்கில் உருவாக்கும் வகையிலும் புதிய பொருளாதார உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும், பல்வேறு துறைகளுக்கும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதிய தொகுப்பின் ஊக்க உதவி திட்ட அறிவிப்பு மிகவும் பயன் அளிக்கத்தக்கது. தேசத்தின் நலன் கருதி வெளியிடப்படும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு மக்களிடம் ஏற்படும் வரவேற்பினை பொறுத்துக்கொள்ள முடியாமல் காங்கிரஸ் கட்சியினர் குறை கூறுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story