நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் கத்திமுனையில் தம்பதியை மிரட்டி 22 பவுன் நகை கொள்ளை தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு


நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் கத்திமுனையில் தம்பதியை மிரட்டி 22 பவுன் நகை கொள்ளை தப்பி ஓடிய முகமூடி கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 July 2021 2:36 PM GMT (Updated: 2 July 2021 4:46 PM GMT)

திண்டுக்கல் அருகே, நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள் கத்திமுனையில் தம்பதியை மிரட்டி 22 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

தாடிக்கொம்பு,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அடுத்த சென்னமநாயக்கன்பட்டி சக்தி முருகன் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 60). இவர் அரசு மருத்துவத்துறையில் ஊழியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று இருந்தார். இவரது மனைவி அருந்ததி (55) ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 

நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டின் வெளிக்கதவை பூட்டிவிட்டு காற்றுக்காக உள்பக்க வீட்டு கதவு, ஜன்னல் ஆகியவற்றை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இவர்களது ஒரே மகன் ராகுல் மாடியில் உள்ள  அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

நகை கொள்ளை

இந்தநிலையில் நள்ளிரவில்  முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர். இந்த சத்தம் கேட்டு பழனியும், அருந்ததியும் திடுக்கிட்டு எழுந்து வந்து பார்த்தனர். அப்போது முகமூடி கொள்ளையர்கள் பழனியை தாக்கினர். மேலும் கத்தியை காட்டி நகை, பணத்தை தருமாறு மிரட்டினர். இதையடுத்து அருந்ததி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டனர். மேலும் வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் நகை, பணத்தை எடுத்து தருமாறு கூறினர். 

இதையடுத்து அருந்ததி பீரோவில் இருந்த 17 பவுன் நகையை எடுத்து கொடுத்தார். அப்போது கொள்ளையர்கள் பீரோவில் இருக்கும் பணத்தையும் எடுத்து தருமாறு மிரட்டினர். இதற்கு அருந்ததி பீரோவில் பணம் இல்லை என்று கூறினார். எனினும் கொள்ளையர்கள் இதை நம்பாமல் பீரோவை திறந்து அதில் இருந்த துணிமணிகளையும் பொருட்களையும் வெளியே எடுத்து வீசி தேடிப்பார்த்தனர். அதில் நகையோ பணமோ இல்லை. இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

கைரேகை நிபுணர்கள்

இதுகுறித்து பழனி, தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன், திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின்தினகரன், தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி சிறிதுதூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

இந்த கொள்ளை தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story