கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய குழு ஆய்வு


கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய குழு ஆய்வு
x
தினத்தந்தி 2 July 2021 2:53 PM GMT (Updated: 2 July 2021 2:55 PM GMT)

குன்னூர் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய குழு ஆய்வு செய்தது.

குன்னூர்,

குன்னூர் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய குழு ஆய்வு செய்தது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக நீர்நிலைகளில் விடப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் மாசுபட்டு, சுற்றுச்சூல் பாதிக்கும் அபாயம் உள்ளது.

குறிப்பாக குன்னூர் பஸ் நிலையத்துக்கு அருகில் ஆறு செல்கிறது. கழிவுநீரால் அந்த ஆற்று தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படும் நிலை காணப்படுகிறது.

ஆய்வு

இதை கருத்தில் கொண்டு கழிவுநீரை சுத்திகரித்து ஆற்றில் விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மாசுக்கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் செயற்பொறியாளர் லிவிங்ஸ்டன் தலைமையிலான குழுவினர் குன்னூருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைத்து வார்டுகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். 

மேலும் நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீரை சோதனைக்காக எடுத்து கொண்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

திட்ட மதிப்பீடு

குன்னூர் நகராட்சி வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து, தீயணைப்பு நிலையம் அருகில் கட்டப்பட உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து நீர்நிலைகளில் விட திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. 

இதற்காக 21 இடங்களில் இருந்து கழிவுநீரை சோதனைக்காக எடுத்து உள்ளோம். அதன்பிறகு திட்ட மதிப்பீடு உருவாக்கப்பட்டு, பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
அப்போது நகராட்சி ஆணையாளர் பாலமுருகன், சுகாதார அதிகாரி டாக்டர் ரகுநந்தன், சுகாதார ஆய்வாளர் மால் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story