மாவட்ட செய்திகள்

கோட்டா முறையில் பச்சை தேயிலை கொள்முதல் + "||" + Purchase of green tea on quota basis

கோட்டா முறையில் பச்சை தேயிலை கொள்முதல்

கோட்டா முறையில் பச்சை தேயிலை கொள்முதல்
கூட்டுறவு தொழிற்சாலைகளில் வரத்து அதிகரித்ததால், கோட்டா முறையில் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி,

கூட்டுறவு தொழிற்சாலைகளில் வரத்து அதிகரித்ததால், கோட்டா முறையில் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கூட்டுறவு தொழிற்சாலைகள்

நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகிறார்கள். இதன் மூலம் தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரியில் இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
கடந்த சில நாட்களாக தினமும் தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து அதிகரித்து உள்ளது. 

சில தொழிற்சாலைகளில் இலைகளை அரைத்து தேயிலைத்தூளாக மாற்றும் திறன் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் கிலோ முதல் 30 ஆயிரம் கிலோ வரை மட்டுமே இருக்கிறது. ஆனால் 50 ஆயிரம் கிலோவுக்கு மேல் பச்சை தேயிலை வருகிறது. இதனால் தொழிற்சாலைகளில் பச்சை தேயிலை தேக்கம் அடைந்து உள்ளது. 

குறைந்த அளவு கொள்முதல்

இதன் காரணமாக வரத்து அதிகரிப்பால் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளிடம் இருந்து கோட்டா முறையில் பச்சை தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் முதல் கோட்டா முறை அமலுக்கு வந்தது.

அதன்படி விவசாயிகள் ஆண்டுக்கு எத்தனை கிலோ பச்சை தேயிலையை தொழிற்சாலைக்கு வினியோகம் செய்கிறார்களோ, அதில் குறிப்பிட்ட அளவு மட்டும் பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படும்.

வீணாகும் அபாயம்

மஞ்சூர், எடக்காடு, இத்தலார் ஆகிய கூட்டுறவு தொழிற்சாலைகளில் கோட்டா முறைப்படி விவசாயிகளிடம் இருந்து குறைந்த அளவு மட்டுமே பச்சை தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் தோட்டங்களில் பறித்த பச்சை தேயிலையை முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பச்சை தேயிலை வீணாகும் அபாயம் உள்ளது. 

மேலும் குறிப்பிட்ட அளவு மட்டும் பறித்தால், பறிக்காமல் விடப்பட்ட இலைகள் செடிகளிலேயே முற்றி போய்விடும். இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி திறனை அதிகரித்து, பச்சை தேயிலை கொள்முதலை வழக்கம்போல் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்