பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டவர் கைது


பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து  யூடியூப்பில் பதிவிட்டவர் கைது
x
தினத்தந்தி 2 July 2021 10:08 PM IST (Updated: 2 July 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

தேனியை சேர்ந்த பெண்ணின் புகைப்படம், வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்ட மதுரையை சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

தேனி:
தேனியை சேர்ந்த பெண்ணின் புகைப்படம், வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்ட மதுரையை சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
டிக்டாக் பிரபலம்
மதுரையை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 45). மதுரை செல்வா என்று அழைக்கப்படும் இவர், தடை செய்யப்பட்ட ‘டிக்டாக்’ செயலி மூலம் பிரபலம் ஆனவர். டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்பு இவர் யூடியூப்பில் சேனல் உருவாக்கி வீடியோக்களை பதிவிட்டு வந்தார். தனது யூடியூப் சேனலுக்கு மதுரை செல்வா என்றும் பெயர் வைத்திருந்தார். 
மதுரை செல்வா சமீபகாலமாக தனது யூடியூப் சேனலில் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, அதை வீடியோவாக பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் யூடியூப் கருத்து பரிமாற்றத்திலும் அவரும் ஆபாசமான கருத்துகளை பதிவு செய்து வந்தார். 
ஆபாச வீடியோக்கள்
இந்தநிலையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 32 வயது பெண் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களிலும், யூடியூப்பிலும் பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படம், வீடியோக்கள் சில யூடியூப் சேனல்களில் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டது யார் என்று தேடி பார்த்தார். அப்போது அவற்றை பதிவிட்டது மதுரை செல்வா என்பது தெரியவந்தது. மேலும் மதுரை செல்வா, தனது யூடியூப்பில் நேரடி வீடியோ பதிவு மூலம் அந்த பெண் குறித்து ஆபாச கருத்துகளை பதிவு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து அந்த பெண், மதுரை செல்வா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மதுரை செல்வா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
மதுரை செல்வா கைது
அந்த தனிப்படையினர் மதுரை செல்வாவை வலைவீசி தேடினர். இந்தநிலையில் அவர் கோவையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் கோவை சென்று மதுரை செல்வாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
பின்னர் அவரை தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், யூடியூப்பில் 3 சேனல்களை உருவாக்கி அதில் ஆபாசமாக சித்தரித்து வீடியோக்கள் பதிவிட்டது தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து அவர் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் அவர் தொடங்கிய யூடியூப் சேனல்களை வலைத்தளத்தில் இருந்து நீக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரபரப்பு
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூப்பில் நடத்தி வந்ததுடன், ஆபாச கருத்துகளை பதிவு செய்து சிறுவர், பெண்களை தவறான பாதைக்கு அழைத்ததாக பப்ஜி மதன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 
அதேபோன்று யூடியூப்பில் தேனியை சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டதாக மதுரை செல்வா கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story