மயிலாடும்பாறை அருகே மலைப்பாதையில் கூட்டமாக திரியும் அரியவகை அனுமன் மந்திகள்
மயிலாடும்பாறை அருகே மலைப்பாதையில் அரியவகை அனுமன் மந்தி குரங்குகள் கூட்டமாக திரிந்து வருகின்றன.
கடமலைக்குண்டு:
மயிலாடும்பாறை அருகே மலைப்பாதையில் அரியவகை அனுமன் மந்தி குரங்குகள் கூட்டமாக திரிந்து வருகின்றன.
அனுமன் மந்திகள்
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே தாழையூத்து வழியாக மதுரை மாவட்டத்தை இணைக்கும் மல்லப்புரம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக பஸ் போக்குவரத்து இல்லை. இருப்பினும் கடமலை-மயிலை பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த மலைப்பாதை வழியாக மோட்டார் சைக்கிள், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வசிக்கும் அனுமன்மந்தி என்று அழைக்கப்படும் அரியவகை குரங்குகள் மல்லப்புரம் மலைப்பாதையில் கூட்டம், கூட்டமாக திரிந்து வருகின்றன. நீண்ட வாலுடன், உடல் முழுவதும் சாம்பல் நிறத்திலும், முகம் மட்டும் கருப்பு நிறத்திலும் காணப்படும் இந்த வகை குரங்குகளை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் சிலர் அந்த குரங்குகளுக்கு வாழைப்பழம், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி செல்கின்றனர்.
எச்சரிக்கை பலகை
இதற்கிடையே மல்லப்புரம் மலைப்பாதையில் ஆபத்தான வளைவுகள் அதிக அளவில் உள்ளன. இதனால் அந்த மலைப்பாதையில் செல்லும் வாகனங்களால் அனுமன்மந்தி குரங்குகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே இந்த மலைப்பாதையில், குரங்குகள் நடமாட்டம் இருப்பது குறித்த எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என்றும், வளைவு பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story