தடுப்பூசிக்கு பயந்து தலைதெறிக்க ஓடிய கிராம மக்கள்
தடுப்பூசிக்கு பயந்து தலைதெறிக்க ஓடிய கிராம மக்கள்
பேரூர்
கோவையை அடுத்த சர்க்கார்போரத்திபதி மலைவாழ் கிராம மக்கள் கொரோனா தடுப்பூசி போட பயந்து தலைதெறிக்க ஓடினர். ஆண்கள் சிலர் மரத்தில் ஏறிநின்று தடுப்பூசி செலுத்த வந்த சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தடுப்பூசி
கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் 2-வது அலை கோரதாண்டவம் ஆடியது. மேலும் நகர்ப்புறத்தைப்போல் கிராமப்புறத்திலும் தொற்று பாதிப்பு அதிகளவு இருந்தது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் அதி தீவிர நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்பயனாக தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் தொற்று தீவிரமாக இருப்பது இல்லை என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் மலைவாழ் கிராம பகுதி மக்களோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என்கிற நிலை உள்ளது.
மரத்தில் ஏறி வாக்குவாதம்
இந்த நிலையில் நேற்று கோவையை அடுத்த சாவடிவயல் அருகே சர்க்கார்போரத்திபதி என்ற மலைவாழ் கிராமத்துக்கு பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய டாக்டர் கனகராணி தலைமையில் டாக்டர் ஹரிபிரசாத், நர்சு ஸ்டெல்லா உள்ளிட்டோர் கொண்ட சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்துவற்காக சென்றனர்.
அவர்களை பார்த்ததும் அங்கு கூடி இருந்த கிராம மக்கள் பலர் ஓட்டம் பிடித்தனர். அப்போது மருத்துவ குழுவினர் அவர்களை தடுத்து, தடுப்பூசியின் பயன்களை விளக்கி கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
தடுப்பூசி போட்டுக்கொண்டால் நாங்கள் இறந்துவிடுவோம் எங்களை விட்டுவிடுங்கள் என்று கூறி ஓடி ஒளியத்தொடங்கினர். இதில் சில ஆண்கள் திடீரென அங்கு இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டனர்.
அப்போது சுகாதாரத்துறையினரிடம் அவர்களை மரத்தை விட்டு கீழே இறங்கி வாருங்கள் என்று கூறினர்.
ஆனால் அவர்கள் வர மறுத்து மரத்திலேயே இருந்தனர். மரத்தில் இருந்தவாறே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
10 பேருக்கு மட்டுமே தடுப்பூசி
இதுகுறித்து டாக்டர் கனகராணி கூறியதாவது
சர்க்கார்போரத்திபதி மலைவாழ் கிராம மக்களுக்கு நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு 60 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தனர். இதையடுத்து நேற்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சென்றோம். ஆனால் அவர்களை தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்று இரவு நேரத்தில் யாரோ கூறி உள்ளனர்.
இதனால் அந்த கிராம மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் எங்களை கண்டதும் ஓடினர். தண்ணீர் பிடிக்க போகிறோம் என்று கூறி பெண்கள் ஆற்றுக்கும், ஆண்கள் தோட்டத்துக்குள்ளும் புகுந்தனர்.
இதில் சிலர் அங்குள்ள மரத்தின் மீது ஏறி நின்றுகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தனர்.
கொரோனா 3-வது அலை வர உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று நாங்கள் எவ்வளவோ எடுத்து கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
அங்கு மொத்தம் 10 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுபோன்று நாங்கள் கல்கொத்திப்பதி என்ற மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்றோம். அங்கும் இதே நிலைதான். பின்னர் அங்கு ஒரு வழியாக மக்களை சமாதானப்படுத்தி 13 பேருக்கு தடுப்பூசி போட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story