முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
முன்களப் பணியாளர்களாக அறிவிக்கக்கோரி அங்கன்வாடி பணியாளர்கள் போளூரில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போளூர்
அங்கன்வாடி பணியாளர்கள்
போளூர் வட்டாரத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 111 பேரும், உதவியாளர்கள் 106 பேரும் என 216 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுப்படி, நகரம் மற்றும் கிராமங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியும், வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது உள்பட பல்வேறு கணக்குகளை எடுத்து வருகிறார்கள்.
தினமும் காலை 7 மணி அளவில் இந்த பணி தொடங்குகிறது. இவர்களுக்கு முககவசம், சானிடைசர் திரவம் போன்ற கொரோனா தடுப்பு பொருட்கள் வழங்கவில்லை.
முற்றுகை போராட்டம்
இவர்களையும் முன்களப்பணியாளர்களாக அரசு அறிவித்து சலுகைகள் வழங்க கோரி நேற்று போளூரை அடுத்த வசூரில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க நிர்வாகி மோகனாம்பாள் தலைமை தாங்கினார். இதில் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து. தகவல் அறிந்ததும் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் கூறி கலைந்து போக கூறினர்.
அப்போது மாவட்ட திட்ட அலுவலர் கந்தன் அங்கு வந்தார். அவர் உங்களின் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் கூறி ஆவன செய்வதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story