புவனகிரி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் விவசாயிகள் கவலை


புவனகிரி அருகே நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 2 July 2021 10:34 PM IST (Updated: 2 July 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

புவனகிரி அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து போனது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

புவனகிரி, 


புவனகிரி அருகே மருதூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சுற்றிலும் அமைந்துள்ள விவசாயிகள் தங்கள நிலத்தில் அ றுவடை செய்த நெல்லை அந்த கொள்முதல் நிலையத்துக்கு எடுத்து வந்து விற்பனை செய்து சென்றனர். இதில் ஆங்காங்கே நெல் மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தனர். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென அந்த பகுதியில் கனமழை பெய்தது. இதில் அங்கு விவசாயிகள் விற்பனைக்காக எடுத்து வந்திருந்த நெல்  மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து போனது. இதனால் விவசாயிகள் அவசர அவசரமாக தார்ப்பாய்களை கொண்டு நெல்லை மூடி பாதுகாத்தனர். 

நனைந்துபோன நெல்

அதுமட்டுமின்றி கொள்முதல் நிலையம் அமைந்துள்ள பகுதி பள்ளமான  இடம் என்பதால், அந்த பகுதியில் வழிந்தோடிய தண்ணீர் நெல் மூட்டைகளையும்  சூழ்ந்து நின்றது. 

இது விவசாயிகளுக்கு மேலும் கவலையை தந்தது. ஏனெனில் தார்ப்பாய்களுக்கு கீழ் பகுதியின் வழியாக தண்ணீர் ஊடுருவி சென்றும் நெல் மூட்டைகள் நனைந்து போனது. இதனால் வேறு வழியின்றி மண் மேடுகளை  அமைத்து தண்ணீர் உள்ளே புகாமல் விவசாயிகள் தடுத்தனர். 

இவ்வாறு நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழையில் இருந்து நெல்மணிகளை காக்க விவசாயிகள் பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


வேதனை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. மழையில் இருந்து பாதுகாக்க தார்ப்பாயை பயன்படுத்தினாலும் கூட, அருகே உள்ள பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீர் நெல் குவியல்களுக்குள் புகுந்துவிட்டது. 

இதில் சுமார் 4 ஆயிரம் மூட்டை நெல் நனைந்து போய் இருக்கும். இது எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று வேதனையுடன் தெரிவித்தார். 

Next Story