ஓசூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட ரவுடியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை-மேலும் ஒருவர் கைது


ஓசூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட ரவுடியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை-மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 2 July 2021 10:54 PM IST (Updated: 2 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட ரவுடியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. இந்த கொலை தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மத்திகிரி,

ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே உள்ள கலுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 35). ரவுடியான இவர் மீது ஓசூர், கர்நாடக மாநில போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் கடந்த மாதம் 25-ந் தேதி மஞ்சுநாத்தை, ஓசூர் அருகே உள்ள உளிவீரனப்பள்ளியை சேர்ந்த சேத்தன் (23), சந்தீப் (21) ஆகியோர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி, பின் தலையில் அடித்துக்கொலை செய்ததும், பிறகு அவரது உடலை உளிவீரனப்பள்ளி இரும்பு கம்பெனி பின்புறம் உள்ள ஏரி அருகே புதைத்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து சேத்தன், சந்தீப் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த உளிவீரனப்பள்ளியை சேர்ந்த மணி (20) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதான 3 பேரும் உறவினர்கள் என்பதும், இவர்களின் உறவுக்கார பெண் ஒருவருக்கு மஞ்சுநாத் தொந்தரவு கொடுத்து வந்ததால் இந்த கொலையை செய்ததும் தெரிந்தது. 
இதற்கிடையே கைதான சேத்தன், சந்தீப், மணி ஆகிய 3 பேரையும் மத்திகிரி போலீசார், மஞ்சுநாத் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேற்று அழைத்து சென்று விசாரித்தனர்.

உடல் தோண்டி எடுப்பு 

பின்னர் கொலை செய்யப்பட்ட மஞ்சுநாத்தின் உடல், தேன்கனிக்கோட்டை தாசில்தார் இளங்கோ முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திலேயே மஞ்சுநாத் உடலை பிரேத பரிசோதனை செய்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். 
தொடர்ந்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மஞ்சுநாத் உடல் புதைக்கப்பட்ட பகுதியில் அவரது உறவினர்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story