மாத பட்ஜெட்டை பாதிக்கும்: சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்-கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட இல்லத்தரசிகள் கருத்து


மாத பட்ஜெட்டை பாதிக்கும்: சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்-கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட இல்லத்தரசிகள் கருத்து
x
தினத்தந்தி 2 July 2021 11:09 PM IST (Updated: 2 July 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

மாத பட்ஜெட்டை பாதிக்கும் வகையில் உயர்ந்து கொண்டே செல்லும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை எங்களால் தாங்கவே முடியாது என்பதால் எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் என்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட இல்லத்தரசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி:
மாத பட்ஜெட் உயர்வு
சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 3 மாதங்களுக்கு பிறகு ரூ.25 உயர்ந்து ரூ.850.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் முன்பதிவு செய்திருந்த இல்லத்தரசிகளின் வீடுகளுக்கு நேற்று சிலிண்டர் கொண்டு வரப்பட்ட போது, விலையை பார்த்து இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட இல்லத்தரசிகள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரியத்தை சேர்ந்த விஜயலட்சுமி:-
சர்வதேச சந்தை விலையை காரணம் கூறி, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் விலையை மாதந்தோறும் உயர்த்தி வருகின்றன. கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சமையல் கியாஸ் விலையை உயர்த்துவது மக்களுக்கு மேலும் சுமையாகவே அமையும். கடந்த சில ஆண்டுகளாகவே பெட்ரோல், டீசல் விலையை போல சமையல் கியாஸ் விலையும் உயர்ந்து வருகிறது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் சிரமத்தை தருகிறது. எனவே சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற்று, விலையை கட்டுப்படுத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும் சுமை
ஓசூர் ஆசிரியர் காலனியை சேர்ந்த இல்லத்தரசி சபீனா தாஜ்:-
தற்போது சமையல் கியாஸ் அடுப்பை அனைத்து தரப்பு மக்களும பயன்படுத்தி வருகிறார்கள். இதன் விலை மாதந்தோறும் உயர்த்துவது அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தும். தற்போது கொரோனா ஊரடங்கால் பலரும் வேலை இழந்து வீட்டில் இருக்கிறார்கள். 
போதிய வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை, மளிகை, காய்கறி, பால், மின் கட்டணம், இருசக்கர வாகன பெட்ரோல் செலவு, மருத்துவ செலவு என்று வருமானத்திற்கு அதிகமாக செலவுகள் உள்ளது. இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையை அடிக்கடி உயர்த்துவதால் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். இதை அரசு உணர்ந்து, சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்.
கலக்கம்
தர்மபுரி சோகத்தூரை சேர்ந்த இல்லத்தரசி அமலா:-
நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் மாத பட்ஜெட்டை பாதிக்கும் வகையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலையை காரணமாக கூறி மாதந்தோறும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை அதிகரித்து கொண்டே செல்கின்றன. கடந்தாண்டு ஜூலை மாதம் ரூ.610 ஆக இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூ.850 ஆக உயர்ந்துள்ளது. ஒரே ஆண்டில் சிலிண்டர் விலை ரூ.240 அதிகரித்துள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாத நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்துவது நியாயம் இல்லை. வீட்டு வாடகை, பள்ளி, கல்லூரி கட்டணங்கள் போன்றவற்றுடன் சமையல் கியாஸ் சிலிண்டரும் விலை உயர்ந்து கொண்டே போவதால் மாத பட்ஜெட்டும் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விறகு அடுப்பை தேடி செல்ல வேண்டிய நிலை அனைவருக்கும் ஏற்படும்.
முறையான மானியம்
கும்பாரஅள்ளியை சேர்ந்த இல்லத்தரசி உமா கூறியதாவது:-
தற்போது ஏழை, எளிய மக்கள் உள்பட அனைத்து தரப்பினருமே தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாக சமையல் கியாஸ் சிலிண்டர் மாறி விட்டது. இந்த சூழலை பயன்படுத்தி கொண்டு விலையை மாதந்தோறும் உயர்த்துவது அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது. ரூ.600-க்கு கியாஸ் சிலிண்டர் விற்பனை செய்யும்போது ரூ.250 வரை மானியம் வழங்கப்பட்டது.ஆனால் தற்போது ரூ.850-க்கு விற்பனை செய்யும்போது மானியம் ரூ.25 தான் வழங்கப்படுகிறது. எனவே, மானியம் வழங்குவதாக இருந்தால் அதை முறையாக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Next Story