மொரப்பூரில் வங்கி மேலாளர், ஆசிரியர் வீடுகளில் திருட்டு
மொரப்பூரில் வங்கி மேலாளர், அரசு பள்ளி ஆசிரியர் வீடுகளில் நகை, தங்க காசு திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொரப்பூர்:
வங்கி மேலாளர்
மொரப்பூர் வி.ஐ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 36). இவர் பெங்களூருவில் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 கிராம் தங்க காசு, 10 வெள்ளி காசுகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. இதுகுறித்து அவர் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் திருட்டுபோன வீட்டுக்கு சென்று பார்வையிட்டு மணிகண்டன் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
ஆசிரியர் வீடு
மொரப்பூர் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (34). அரசு பள்ளி ஆசிரியர். இவர் வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். இந்த தொடர் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story