புதிதாக 208 மாணவர்களை சேர்த்து அசத்திய அரசு தொடக்கப்பள்ளி
கரூர் அருகே உள்ள நரிக்கட்டியூரில் புதிதாக 208 மாணவர்களை சேர்த்து அசத்தும் அரசு தொடக்கப்பள்ளி. மொத்த எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது.
கரூர்
அரசு தொடக்கப்பள்ளி
கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம், நரிக்கட்டியூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 19567-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2002-ம் ஆண்டில் 5 மாணவர்கள் மட்டுமே பயின்று வந்தனர். பின்னர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக விஜயலலிதா பொறுப்பேற்றார். அவரின் கடின முயற்சியால் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக கணிசமாக அதிகரித்து, சென்ற கல்வியாண்டில் 453 மாணவர்களும், இந்த கல்வியாண்டில் நேற்று வரை 562 மாணவர்களாகவும் அதிகரித்துள்ளது.
தற்போது தலைமை ஆசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் சிறந்த பள்ளிக்கான விருதினை 3 முறை நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பெற்றுள்ளது. இப்பள்ளியில் சுவர் முழுவதும் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுவரில் திருக்குறள் உள்ளிட்ட வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன. பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ், நூலக வசதி, கணினி, மின்விசிறி, டைல்ஸ், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது. காந்திகிராமம், தாந்தோன்றிமலை, சணப்பிரட்டி, புலியூர், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மக்கள் ஆர்வத்துடன் தங்களது பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
புதிதாக 208 மாணவர்கள்
ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சேரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்த போதும் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதாலும், கொரோனா ஊரடங்கால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருவதாலும் தற்போது கூடுதலாக மாணவர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இப்பள்ளியில் கடந்த 14-ந் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில் நேற்று வரை 208 மாணவர்கள் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ளனர். இதில் 108 மாணவர்களும், 100 மாணவிகளும் உள்ளனர். 1-ம் வகுப்பில் 85 மாணவர்களும், 2-ம் வகுப்பில் 110 மாணவர்களும், 3-ம் வகுப்பில் 109 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 117 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 141 மாணவர்களும் என மொத்தம் 562 மாணவர்கள் உள்ளனர்.
10 ஆசிரியர்கள்
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலலிதா கூறுகையில், இப்பள்ளியானது 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 562 மாணவர்களாக எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 208 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒரு ஆசிரியராக இருந்த பள்ளியில், தற்போது 10 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். கூடுதலாக ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மேலும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். குழந்தையின் அறிவு திறனை வளர்ப்பதற்கு செஸ், யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகிறது. பொதுமக்கள், ஆசிரியர்கள் பங்களிப்புடன் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
Related Tags :
Next Story