பாதை வசதிக்காக பாலம் அமைக்ககோரி ஆற்றுவாரியில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்


பாதை வசதிக்காக பாலம் அமைக்ககோரி ஆற்றுவாரியில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 July 2021 12:11 AM IST (Updated: 3 July 2021 12:11 AM IST)
t-max-icont-min-icon

தோகைமலை அருகே பாதை வசதிக்காக பாலம் அமைக்ககோரி ஆற்றுவாரியில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தோகைமலை
பாலம் கட்டும் பணி 
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட செங்காட்டு பகுதியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்வதற்காக ஆற்றுவாரி குறுக்கே தோகைமலை- பாதிரிப்பட்டி மெயின் சாலையில் வடபுறமாக பாதை செல்கிறது. இந்த பாதை வழியாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காக ஆற்றுவாரியின் குறுக்கே பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அளவீடு செய்யப்பட்டது. ஆனால் பாலம் கட்டுவதற்கு ஏற்பட்ட சில பிரச்சினையால் பாலம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். 
ஆற்றுவாரியில் இறங்கி போராட்டம்
இந்தநிலையில், ஆற்றுவாரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளதாலும், நேற்று முன்தினம் அப்பகுதியில் கனமழை பெய்ததாலும் ஆற்றுவாரியில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் செங்காட்டு பகுதியில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு பாதை வசதி இல்லாமல் அவதி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த செங்காட்டு பகுதி பொதுமக்கள் பாதை வசதிக்காக பாலம் அமைக்க வேண்டும் எனக்கூறி நேற்று காலை ஆற்றுவாரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை ஒன்றிய ஆணையர்கள் ராஜேந்திரன், குமரவேல் என்ஜினீயர் மைதிலி, ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி சக்திவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக பாலம் கட்டும் பணியை தொடங்கி பாதை வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story