30 பேர் கருப்பு பூஞ்சை தொற்றில் இருந்து மீண்டனர்


30 பேர் கருப்பு பூஞ்சை தொற்றில் இருந்து மீண்டனர்
x
தினத்தந்தி 2 July 2021 6:43 PM GMT (Updated: 2 July 2021 6:43 PM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 30 பேர் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 30 பேர் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு திட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் கணிசமாக குறைந்து வருவதோடு பலி எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதன்காரணமாக சுகாதாரத்துறையினர் தற்போது கொரோனா பணிகள் தவிர இதர வழக்கமான சுகாதார பணிகளிலும் மக்கள் நல பணிகளிலும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். குறிப்பாக கடந்த தி.மு.க. ஆட்சியில் கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டம் என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. 7 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கண்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பதுடன் கண் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. 
இந்த திட்டம் தற்போதும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் அங்கன்வாடி மையங்கள் பள்ளிகள் போன்றவற்றில் இந்த கண்சிகிச்சை முகாம்களை நடத்த சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
பரிந்துரை
இந்த முகாம்களில் கண்சிகிச்சை நிபுணர்கள் சென்று மாணவ, மாணவிகளின் கண்களை பரிசோதனை செய்து கண்கண்ணாடி இலவசமாக வழங்குவதோடு உரிய சிகிச்சை அளிப்பார்கள். அறுவை சிகிச்சை உள்ளிட்ட தேவை ஏற்பட்டால் அரசு ஆஸ்பத்திரிகளை பரிந்துரை செய்வார்கள்.
இந்த பணிகளில் சுகாதாரத்துறையினர் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். மாவட்டத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை. எனினும் வெளி மாநிலங்களில் இருந்து குறிப்பாக வடமாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் 30 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
சிறப்பு முகாம்
இவர்கள் அனைவரும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர். கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டாலும் அது குணமடைந்து இதர நோய் பாதிப்பால் தான் சிலர் இறந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தற்போது 10 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இவை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு போடப்பட உள்ளன. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story