வீட்டில் குழந்தை பெற்ற பெண் சாவு


வீட்டில் குழந்தை பெற்ற பெண் சாவு
x
தினத்தந்தி 3 July 2021 1:00 AM IST (Updated: 3 July 2021 1:00 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே வீட்டில் குழந்தை பெற்ற பெண் பரிதாபமாக இறந்தார்.

வேப்பந்தட்டை:

திருமணம் செய்யாமல்...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி மின்னல்கொடி. இவர்களுடைய மகள் ராஜாமணி(வயது 23). இவரும், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன் (35) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் காரியானூர் ஜெயந்தி காலனியில் கடந்த 2 ஆண்டுகளாக கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு ராஜாமணி கர்ப்பமானார். அப்போது காரியானூரில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்வதற்காக ராஜாமணி சென்றுள்ளார். அங்கு மருத்துவ பணியாளர்கள் கணவரின் ஆதார் அட்டையை கொண்டு வருமாறு கூறியுள்ளனர். இதற்கு பயந்து ராஜாமணி மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இருப்பினும் துணை சுகாதார நிலைய செவிலியர்கள் வீட்டிற்கே சென்று அவருக்கு அவ்வப்போது மருந்து, மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளனர்.
சாவு
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜாமணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டிலேயே அவருக்கு பிரசவமாகி, ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் ராஜாமணி மயங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த கை.களத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபுபக்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆண் குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மருத்துவமனைக்கு முறையாக சென்று பரிசோதனை செய்யாததால் தாய் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story