குவிந்து கிடக்கும் நெல்; காத்திருக்கும் விவசாயிகள்


குவிந்து கிடக்கும் நெல்; காத்திருக்கும் விவசாயிகள்
x

வத்திராயிருப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் குவிந்து கிடக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
நெல் சாகுபடி 
 வத்திராயிருப்பு பகுதியில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது கோடை சாகுபடி முடிந்து அறுவடை சீசன் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால் நெல் வரத்து அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்காக கான்சாபுரம், வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் அரசின் சார்பில் தொடங்கப்பட்டு்ள்ளன. 
தற்போது அரசு கிலோவுக்கு ரூ.19.36 பைசா என விலை நிர்ணயம் செய்துள்ளது. இது விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகக்கூடிய நல்ல விலை என்பதால் விவசாயிகள் வியாபாரிகளிடம் நெல்லை போடுவதை விடுத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து போடுகின்றனர்.
ஆனால் நெல் கொள்முதல் இல்லாத பகுதிகளில், வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து நெல்லை கொள்முதல் செய்து இப்பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து போதுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். 
இதனால் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்வதில் கால தாமதம் ஆகிறது. 
 15 நாட்களுக்கும் மேலாக கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவித்து வைத்து விட்டு இன்னும் எடைபோட முடியாமல் காத்திருக்கின்றனர்.
காத்திருப்பு 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
வத்திராயிருப்பு பகுதியில் தற்போது நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக எடுத்து சென்றால் குறைந்தது 15 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. 
இதற்கிடையே மழை, வெயில் என இயற்கை சீற்றங்களால் நெல்லின் தன்மை கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதன் தரம் குறைகிறது. இதனால் கொள்முதல் நிலைய அதிகாரிகள் தரமற்ற நெல் என கழித்து விடுகின்றனர். இது விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நடவடிக்கை 
அதிக அளவில் விவசாயிகள் காத்திருப்பதால் தற்போது ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.
டோக்கன் வரிசைப்படி வந்து நெல்லை பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர். ஆனால் அந்த டோக்கன் படி யாரையும் தற்போது அழைப்பதில்லை. வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்ய  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர். 
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தற்போது அறுவடை நேரம் என்பதால் வழக்கத்தை காட்டிலும் அதிக அளவு நெல்மூடைகள் வருகின்றன. ஆதலால் தான் கால தாமதம் ஆகிறது என்றார்.

Next Story