தாசில்தார் வாகனத்தை, விஷ பாட்டிலுடன் முற்றுகையிட்ட மக்கள்


தாசில்தார் வாகனத்தை, விஷ பாட்டிலுடன் முற்றுகையிட்ட மக்கள்
x
தினத்தந்தி 2 July 2021 7:44 PM GMT (Updated: 2 July 2021 7:44 PM GMT)

வி.கைகாட்டி அருகே நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தாசில்தார் வாகனத்தை, விஷ பாட்டிலுடன் இருளரின மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வி.கைகாட்டி:

மாற்று சமுதாயத்தினருக்கு பட்டா
அரியலூர் மாவட்டம் விளாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தூர் சாலையில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 3 தலைமுறைகளாக விவசாயம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2006-07-ம் ஆண்டு தேளூர், குடிசல், மண்ணுழி ஆகிய ஊர்களில் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு, ஒரத்தூர் இருளரின மக்கள், விவசாயம் செய்த நிலத்தை பட்டா போட்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து இருளர் சமுதாய மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்ததைத்தொடர்ந்து, 2012-ம் ஆண்டு பட்டா ரத்து செய்யப்பட்டது.
நிலத்தை கையகப்படுத்த வந்தனர்
பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை நடத்தி, இருளர் சமுதாயத்தினருக்கு பட்டா வழங்க முன்வந்தார். இதையடுத்து அந்த இடத்தை அப்போதைய மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு, இடத்தை அனுபவித்து வந்த இருளர் சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க, 2014-ம் ஆண்டு அரியலூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. தற்போது இருளர் சமுதாயத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்து எள், கடலை, உளுந்து, பருத்தி, முந்திரி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வருவாய்த்துறை அதிகாரிகள், இருளரின மக்கள் விவசாயம் செய்துவரும் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அரியலூர் தாசில்தார் ராஜமூர்த்தி, நில அளவையர், விளாங்குடி கிராம நிர்வாக அலுவலர் அனுசுயா தேவி, தேளூர் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.
விஷ பாட்டிலுடன் முற்றுகை
இதனால் அதிர்ச்சி அடைந்த இருளர் சமுதாயத்தினர் பட்டா மற்றும் கையில் விஷ பாட்டிலுடன் சென்று, தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நிலத்தை கையகப்படுத்தினால், விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சிலர் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இருளர் சமுதாய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஒரு வாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story