பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு


பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 July 2021 1:16 AM IST (Updated: 3 July 2021 1:16 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்க பொது எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ராஜபாளையம், 
ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்க பொது எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினர். 
எதிர்ப்பு 
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் 3 இடங்களில் அமைக்கப்படும் உந்து நிலையத்தில் இருந்து நகராட்சி உரக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும்.
நகரின் வடக்கு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர், கீழ ஆவரம்பட்டி பகுதியில் அமைக்கப்பட உள்ள உந்து நிலையத்தில் இருந்து உரக்கிடங்கிற்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
போராட்டம் 
இதையடுத்து மதுரை சாலையில் உள்ள மாயூரநாதர் சாமி கோவிலுக்கு பக்கவாட்டு இடத்தில் உந்து நிலையம் அமைக்க நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறையினர் நேற்று அளவீடு செய்துள்ளனர்.
இதையறிந்த பொது மக்கள், பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் குவிந்தனர். வழக்கமாக ஆனி மாதம் கோவிலில் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது, சுவாமி மற்றும் அம்மன் தேர் செல்லும் பாதையில் பாதாள சாக்கடை உந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், பணிகளை நிறுத்தியும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை 
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். 
உந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் வரை தங்கள் போராட்டத்தை கை விட பொது மக்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து ராஜபாளையத்திற்கு வருகை தந்த கலெக்டர் மேகநாதரெட்டி, பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். சாக்கடை உந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொது மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.பொது மக்களின் கோரிக்கையை  ஏற்று பரிசீலனை செய்வதாக அவர் உறுதி அளித்தார்.

Next Story