ரவுடியை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 3 July 2021 1:19 AM IST (Updated: 3 July 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

பழ வியாபாரியை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிரபல ரவுடி சாமி ரவியை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு ஒருநாள் அனுமதி அளித்தது.

திருச்சி
ரூ.2 கோடி கொள்ளை
கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி திருச்சி-கரூர் சாலையில் பெட்டவாய்த்தலை அருகே காரில் கொண்டு சென்ற ரூ.2 கோடி பணத்தை மற்றொரு காரில் வந்த கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 இதுதொடர்பாக ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளியான திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி சாமி ரவி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.
மீண்டும் சிறையில் அடைப்பு
கைதான சாமிரவியிடம் இருந்து கொள்ளை பணம் ரூ.1 கோடியே 65 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சாமி ரவி கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மூளையாக இருந்து செயல்பட்டவர் என்பதால் அவரை பெட்டவாய்த்தலை போலீசார் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
அதன்படி, ரவுடி சாமி ரவியை போலீஸ் காவலில் விசாரிக்க கடந்த 28-ந் தேதி போலீஸ் நிலையம் அழைத்து வந்த நிலையில் அவருக்கு உடல் நிலை சரியில்லாததால், உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், போலீசார் விசாரிக்காமலேயே கடந்த 30-ந் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஒருநாள் விசாரிக்க அனுமதி
இதற்கிடையே ரவுடி சாமி ரவி மீது பழ வியாபாரியை மிரட்டி பணம் பறித்ததாக கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. எனவே, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கே.கே. நகர் போலீசார் திருச்சி 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தனர்.
இந்த மனு மீது நேற்று விசாரணைக்கு வந்தபோது, புதுக்கோட்டை ஜெயிலில் இருந்து சாமி ரவி அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் தரப்பில் 3 நாட்கள் விசாரணைக்கு அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் மாஜிஸ்திரேட்டு திரிவேணி, ஒரு நாள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சாமிரவி போலீசாரால் கே.கே. நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று (சனிக்கிழமை) விசாரணை முடிந்ததும், மாலையில் மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story