கைதி உடல் 71 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு


கைதி உடல் 71 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 2 July 2021 7:58 PM GMT (Updated: 2 July 2021 7:58 PM GMT)

நெல்லையில் கைதி உடல் 71 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை:
பாளையங்கோட்டை சிறையில் கொல்லப்பட்ட கைதி உடல் 71 நாட்களுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கைதி கொலை

நெல்லை அருகே மூன்றடைப்பு வாகைகுளத்தைச் சேர்ந்தவர் பாவநாசம். இவருடைய மகன் முத்து மனோ (வயது 27). இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக களக்காடு போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 22-4-2021 அன்று சிறையில் சில கைதிகள் திடீரென்று முத்துமனோவை தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிறை கைதிகள் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முத்து மனோ கொலை தொடர்பாக, ஜெயிலர், உதவி ஜெயிலர் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர் போராட்டம்

இந்த நிலையில் முத்துமனோ கொலையில் தொடர்புடைய சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். முத்துமனோவின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முத்து மனோவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள், கிராம மக்கள் கடந்த 71 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், இதுதொடர்பாக முத்துமனோவின் தந்தை பாவநாசம், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, முத்து மனோவின் உடலை பெற்று இறுதிச்சடங்கு நடத்துமாறு பெற்றோருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் முத்துமனோவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது. தொடர்ந்து முத்துமனோவின் உடலை பெறுவதற்கு பெற்றோர், உறவினர்கள் சம்மதித்தனர்.

உடல் ஒப்படைப்பு

இதையடுத்து முத்துமனோவின் தந்தை பாவநாசம் மற்றும் வக்கீல்கள், உறவினர்கள் நேற்று காலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று கலெக்டர் விஷ்ணுவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அப்போது கோரிக்கைகள் குறித்து தனுஷ்குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் கலெக்டரிடம் பேசினர்.
பின்னர் அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிவா கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், முத்துமனோவின் உடலை அவரது தந்தை பாவநாசம் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அடக்கம்

கண்ணீர்மல்க முத்து மனோவின் உடலை பெற்றுக்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி சொந்த ஊரான வாகைகுளத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். 
பாளையங்கோட்டை சீனிவாசநகர், நான்கு வழிச்சாலை, பொன்னாக்குடி, மூன்றடைப்பு வழியாக வாகைகுளத்தை சென்றடைந்தனர். அங்கு முத்துமனோவின் உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்தனர்.

பலத்த பாதுகாப்பு

இதையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகம், வண்ணார்பேட்டை மேம்பாலம், பாளையங்கோட்டை ஜெயில், அரசு ஆஸ்பத்திரி, பொன்னாக்குடி, மூன்றடைப்பு, வாகைகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவின்குமார் அபிநபு மற்றும் 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் தலைமையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்றன. மூன்றடைப்பு, வாகைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

போராட்டம் தொடரும்

இதுகுறித்து பாவநாசம் தரப்பு வக்கீல் ஜான்சன் கூறுகையில், ‘முத்துமனோ கொலையில் சிறை அதிகாரிகள், களக்காடு போலீசாருக்கும் தொடர்பு உள்ளது. சிறையில் தனி அறையில் அடைக்காமல், பொதுவான அறையில் அடைத்ததால் முத்துமனோ கொலை செய்யப்பட்டு உள்ளார். முத்துமனோவின் குடும்பத்தினருக்கு ரூ.2 கோடி நிவாரணம் கேட்ட நிலையில், தமிழக அரசு ரூ.10 லட்சம் மட்டுமே வழங்கி உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று முத்துமனோவின் உடலை பெற்று அடக்கம் செய்கிறோம். எனினும் எங்களது சட்டப் போராட்டம் தொடரும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில், ஐகோர்ட்டு நீதிபதி தலைைமயில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும்’ என்றார்.

Next Story