செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை


செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 3 July 2021 1:45 AM IST (Updated: 3 July 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே இடப்பிரச்சினையில் செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவிடைமருதூர்; 
கும்பகோணம் அருகே இடப்பிரச்சினையில் செங்கல் சூளை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள். 
இடப்பிரச்சினை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பழைய செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 57). இவர், அய்யாவாடி கட்டுக்கரை பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார். இவருக்கும் திருநாகேஸ்வரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் சந்தோஷ்(27) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. 
கடந்த சில தினங்களுக்கு முன்பு இடப்பிரச்சினை தொடர்பான பஞ்சாயத்தில் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி விட்டதாக கூறி ராஜேந்திரன், சந்தோசுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். 
வெட்டிக்கொலை
இந்த நிலையில் வழக்கம்போல் செங்கல் சூளைக்கு நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் சென்று அங்கு தங்கினார். நேற்று காலை பலத்த அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் செங்கல் சூளையில் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் திருநீலக்குடி போலீசார் ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இடப்பிரச்சினை காரணமாக ராஜேந்திரனை, சந்தோஷ் வெட்டிக்கொன்றது தெரிய வந்தது. 
வலைவீச்சு
இது குறித்து ராஜேந்திரனின் மருமகன் அருண்ராஜ், திருநீலக்குடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோசை தேடி வருகின்றனர். கொலைசெய்யப்பட்ட ராஜேந்திரனுக்கு ஜீவா என்ற மனைவியும் பிரியங்கா என்ற மகளும் மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். 
இடப்பிரச்சினையில் செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் வெட்டிக்காலை செய்யப்பட்ட சம்பவம் திருநாகேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story