பேச்சிப்பாறை, சிற்றார்-1 அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
குமரி மாவட்டத்தில் மழை பெய்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மழை பெய்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது.
தென்மேற்கு பருவமழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இடையில் மழை ஓய்ந்து வெயில் கொளுத்தியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. அதிலும் குறிப்பாக அணைப்பகுதிகளில் கனமழை பெய்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
76.8 மி.மீ. மழை
பேச்சிப்பாறை- 76.8, பெருஞ்சாணி- 19.8, சிற்றார் 1- 30, சிற்றார் 2-11.6, புத்தன் அணை- 18.2, மாம்பழத்துறையாறு- 3, கொட்டாரம்- 2, சுருளக்கோடு- 4.2, பாலமோர்- 54.6, கோழிப்போர்விளை- 2, முள்ளங்கினாவிளை- 3 என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
கடந்த மாதங்களில் புயல் மழையின் காரணமாக குமரி மாவட்ட அணைகள் அனைத்தும் நிரம்பி, உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் கன்னிப்பூ சாகுபடிக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
உபரிநீர் திறப்பு
இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை விட்டு, விட்டு பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.19 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70.80 அடியாகவும், 18 அடி கொள்ளளவைக் கொண்ட சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 16.92 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 17.02 அடியாகவும், 42.65 அடி கொள்ளளவைக் கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 26 அடியாகவும், 54.12 அடி கொள்ளளவைக் கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகவும், 25 அடி கொள்ளளவைக் கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் 23.2 அடியாகவும் இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அணைகளில் கனமழை பெய்ததையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்துக்காக 569 கனஅடி தண்ணீரும், உபரிநீர் மதகுகள் வழியாக 518 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. இதேபோல் சிற்றார்-1 அணையில் இருந்து 268 கன அடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து பாசனத்துக்காக 290 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
குழித்துறை
இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து தடுப்பணைக்கு மேல் சில அடி உயரத்தில் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. எனவே அதன் வழியாக பொதுமக்கள் நடந்து செல்லவோ இருசக்கர வாகனங்களில் செல்லவோ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அதைதொடர்ந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதாலும் கன்னிப்பூ நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் கன்னிப்பூ சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story