மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும்
மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
புதுடெல்லி, ஜூலை.3-
மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும் என்று உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
மோடியுடன் சந்திப்பு
புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து 6 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஏம்பலம் செல்வம் சபாநாயகராகவும், நமச்சிவாயம், சாய்.சரவணன்குமார் ஆகியோர் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்தநிலையில் மரியாதை நிமித்தம் பிரதமர் மோடி மற்றும் தலைவர்களை சந்திப்பதற்காக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றனர்.
அங்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவரிடம் மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். தொடர்ந்து மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி ஆகியோரையும் சந்தித்து பேசினர்.
மத்திய உள்துறை மந்திரி
நேற்று மாலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அவரிடம் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறுகையில், மத்திய உள்துறை மந்திரியை சந்தித்து புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடம் கட்ட நிதி உதவி, மாநில கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மானியத்துடன் கூடிய நிதியுதவி, மாநில வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்திட வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
கடன் தள்ளுபடி
பா.ஜ.க. சட்டப்பேரவை கட்சித்தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் கூறுகையில், கொரோனா நிவாரண நிதியாக ரூ.500 கோடி புதுவைக்கு வழங்க வேண்டும். மாநிலத்திற்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை ரூ.330 கோடியை உடனே வழங்க வேண்டும்.
புதுவை மாநிலத்தின் ரூ.8,500 கோடி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க வேண்டும். மாநிலத்திற்கு வழங்கப்படும் கடன் தொகையை அதிகரித்து தரவேண்டும் என்று வலியுறுத்தினோம். அப்போது அவர் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து எங்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந் தேதிக்கு பிறகு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரிக்கு வரவுள்ளதாக தெரிவித்தார் என்றார்.
இதன்பின் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புதுச்சேரி திரும்பினார்கள்.
Related Tags :
Next Story