குற்றாலத்தில் கடும் வெயில்; அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது.


குற்றாலத்தில் கடும் வெயில்; அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது.
x
தினத்தந்தி 2 July 2021 8:33 PM GMT (Updated: 2 July 2021 8:33 PM GMT)

குற்றாலத்தில் கடும் வெயில் வாட்டுகிறது. அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் கொட்டுகிறது.

தென்காசி:
குற்றாலத்தில் கடும் வெயில் வாட்டுகிறது. அருவிகளில் குறைந்த அளவில் தண்ணீர் விழுகிறது.

மூலிகை சக்தி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இங்குள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டும். குளிர்ந்த காற்று வீசும். இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குற்றாலம் வருவது வழக்கம்.
எத்தனையோ சுற்றுலாத்தலங்களில் அருவிகள் இருந்தாலும் குற்றால அருவிகளுக்கு என தனிச்சிறப்பு உண்டு. இந்த அருவிகளில் மூலிகை சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சீசன் கடந்த மே மாதம் இறுதியில் தொடங்கியது. சில நாட்களாக குளிர்ந்த காற்று வீசியது. சாரல் மழையும் விட்டுவிட்டு பெய்தது. இடையில் 4 நாட்கள் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடும் வெயில்

தற்போது 2-வது ஆண்டாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி இல்லை. இதனால் இங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அருவிகளை பார்ப்பதற்கு கூட யாரையும் போலீசார் அனுமதிப்பது இல்லை.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக குற்றாலத்தில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று காலையில் இருந்தே கடும் வெயில் அடித்து வருகிறது. காற்றின் வேகமும் குறைந்து விட்டது. மாலையில் மட்டும் சற்று குளிர்ந்த காற்று வீசுகிறது.

குளிக்க அனுமதிக்கப்படுமா?

மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைந்த அளவில் விழுகிறது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளது. தற்போது தென்காசி மாவட்டத்தில் நோய் தொற்று குறைந்துவிட்டதால் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்று குற்றாலத்திலும் கடைகளை திறக்க வியாபாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளையும் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு குளிக்க அனுமதிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story