மாவட்ட செய்திகள்

அரிவாளால் வெட்டி பெண் கொலை - கணவர் கைது + "||" + Killed woman with scythe

அரிவாளால் வெட்டி பெண் கொலை - கணவர் கைது

அரிவாளால் வெட்டி பெண் கொலை - கணவர் கைது
விஜயாப்புரா அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு அரிவாளால் வெட்டி பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
  
நடத்தையில் சந்தேகம்

  விஜயாப்புரா மாவட்டம் பசவனபாகேவாடி அருகே சிந்தகேரி கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தா. இவரது மனைவி சாரதா. இந்த தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்த நிலையில், தனது மனைவி சாரதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடன் அடிக்கடி அனுமந்தா சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

  அதுபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பும் சாரதாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அனுமந்தா தகராறு செய்துள்ளார். இதன் காரணமாக அனுமந்தாவுடன் வாழ பிடிக்காமல் பக்கத்து கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சாரதா வந்திருந்தார். அங்கேயே கடந்தசில நாட்களாக அவர் வசித்து வந்தார்.

பெண் வெட்டிக் கொலை

  நேற்று முன்தினம் இரவு மனைவி, குழந்தைகளை பார்க்க அனுமந்தா, மாமனார் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் மனைவியுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு அனுமந்தா படுத்து தூங்கினார். இந்த நிலையில், நள்ளிரவில் எழுந்த அனுமந்தா சாரதாவுடன் சண்டை போட்டதுடன், அவரை வீட்டில் கிடந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவா் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

  தகவல் அறிந்ததும் பசவனபாகேவாடி போலீசார் விரைந்து வந்து சாரதா உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது நடத்தையில் சந்தேகப்பட்டு சாரதாவை அனுமந்தா கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பசவனபாகேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமந்தாவை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.