ஜீப்-வேன் மோதி விபத்து; திருமணமான மறுநாளே புதுப்பெண் சாவு


ஜீப்-வேன் மோதி விபத்து; திருமணமான மறுநாளே புதுப்பெண் சாவு
x
தினத்தந்தி 2 July 2021 8:42 PM GMT (Updated: 2 July 2021 8:42 PM GMT)

விஜயாப்புராவில் ஜீப் மற்றும் வேன் மோதிக் கொண்ட விபத்தில் திருமணமான மறுநாளே புதுப்பெண் பலியானார். புது மாப்பிள்ளை உள்பட 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

திருமணம்

  கலபுரகி மாவட்டம் சங்கரவாடி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கும் ராணி (வயது 26) என்பவருக்கும் 2 பேரின் பெற்றோரும் பேசி திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். அதன்படி, நேற்று முன்தினம் கணேஷ், ராணிக்கு சங்கரவாடி கிராமத்தில் வைத்து திருமணம் நடந்திருந்தது. திருமணம் நல்லபடியாக முடிந்திருந்தால், விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு செல்ல கணேஷ் குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர்.

  அதன்படி, நேற்று காலையில் ஜீப்பில் கணேஷ், ராணி, அவர்களது குடும்பத்தினர் விஜயாப்புராவுக்கு புறப்பட்டு சென்றனர். சிந்தகி தாலுகா யரகல் கிராமத்தில் வரும் போது, இவர்கள் சென்ற ஜீப்பும், அதே சாலையில் வந்த ஒரு வேனும் மோதிக் கொண்டன. வேன் மோதியதில் ஜீப்பின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது.

புதுப்பெண் சாவு

  இந்த விபத்தில் ராணி, கணேஷ் உள்பட 8 பேர் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். தகவல் அறிந்ததும் சிந்தகி போலீசார் விரைந்து வந்து 8 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ராணியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கணேஷ் உள்பட 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  ஜீப், வேன் டிரைவர்களின் கவனக்குறைவே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. இதுகுறித்து சிந்தகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மறுநாளே விபத்தில் புதுப்பெண் பலியான சம்பவம் கலபுரகி மற்றும் விஜயாப்புராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story