கர்நாடகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிலுவைத்தொகையை வழங்குவதாக நிர்மலா சீதாராமன் உறுதி - மந்திரி பசவராஜ் பொம்மை
கர்நாடகத்திற்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிலுவை தொகையை வழங்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளதாக மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
ஜி.எஸ்.டி. இழப்பீடு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் பெங்களூரு வந்தார். நேற்று அவரை போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக அரசின் நிதி நிலை, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து நிர்மலா சீதாராமனிடம் விவாதித்தேன். மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்கீட்டை உடனே விடுவிக்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன். கர்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ.11 ஆயிரத்து 800 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்க வேண்டும். அந்த இழப்பீட்டு தொகையை வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். கடன் பெற்று ரூ.18 ஆயிரம் கோடியை கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
நிதி பற்றாக்குறை
நடப்பு ஆண்டில் ஜி.எஸ்.டி. மூலம் வசூலான தொகையில் முதல் காலாண்டிற்கான நிதியை கர்நாடகத்திற்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன். அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான நிதி உதவியை வழங்குமாறும் கேட்டுக் கொண்டேன். இந்த பணிகளுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள், பல்வேறு தரப்பு தொழிலாளர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணம், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசின் முடிவுகளை நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story