ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு


ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு
x
தினத்தந்தி 3 July 2021 2:17 AM IST (Updated: 3 July 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி கலெக்டரிடம் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

தென்காசி:
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவ பத்மநாதன், ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டு குழு தலைவர் ராம உதயசூரியன் ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது ராமநதி- ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் இணைப்பு திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் இதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு முறையாக இழப்பீட்டுத்தொகை வழங்காமலும், வனத்துறையின் அனுமதி பெறாமலும் அவசர கோலத்தில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றும் வகையில், மாவட்ட கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார். வனத்துறையிடம் அனுமதி பெற்று, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கி, ராமநதி-ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில், குறும்பலாபேரி பத்திரகாளி அம்மன் கோவில், செட்டியூர் கலையரங்கம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் ஆகியோர் பார்வையிட்டனர். தொழிலதிபர் சேவியர் ராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனித்துரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story