3-வது நாளாக கொட்டி தீர்த்த மழை
திண்டுக்கல்லில் 3-வது நாளாக மழை கொட்டி தீர்த்தது.
திண்டுக்கல்:
தென்மேற்கு பருவமழை காலம் என்றாலும் திண்டுக்கல்லில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வருண பகவானின் கருணையால் மழையில் நனைவோம் என்று காத்திருந்த பொதுமக்களை சூரிய பகவான் வாட்டி வதைத்தார்.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மதிய நேரத்தில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதையே தவிர்த்தனர். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி இரவு 9 மணிக்கு மேல் திண்டுக்கல்லில் சுமார் ஒரு மணி நேரம் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பின்னர் மறுநாள் மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழையாகவும், சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்தது. இந்த நிலையில் 3-வது நாளான நேற்று மாலையும் திண்டுக்கல்லில் பலத்த மழை பெய்தது.
மாலை 3.45 மணிக்கு தொடங்கிய இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதன் காரணமாக நாகல்நகர், பஸ் நிலையம் அருகில் என நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.
அதில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. பொதுமக்களும் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் நடந்து சென்றனர்.
Related Tags :
Next Story