பெங்களூருவில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக் கொலை


பெங்களூருவில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 2 July 2021 8:57 PM GMT (Updated: 2 July 2021 8:57 PM GMT)

பெங்களூருவில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபரை மா்மநபர்கள் வெட்டிக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவான மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு:
  
நடுரோட்டில் வெட்டிக் கொலை

  பெங்களூரு வில்சன்கார்டன் அருகே லக்கசந்திராவை சேர்ந்தவர் மதன் (வயது 33). இவர், நேற்று காலை தனது காரில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். பனசங்கரி கோவில் பகுதியில் இருக்கும் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே காலை 11.45 மணியளவில் தனது காரை நிறுத்திவிட்டு காய்கறிகள் வாங்குவதற்காக மதன் சென்றார். காய்கறிகள் வாங்கிவிட்டு அவர் தனது காரை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

  அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள், நீண்ட வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் நடுரோட்டில் வைத்து மதனை சரமாரியாக வெட்டினார்கள். இதில், பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றுவிட்டனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஜெயநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து மதனின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். தகவல் அறிந்ததும் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே அங்கு வந்தார். பின்னர் அவர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது மதனை, 6 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது தெரிந்தது. ஆனால் அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை.

  முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, மர்மநபர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story