ஊழல் புகாரில் தனி செயலாளர் கைது; மந்திரி ஸ்ரீராமுலு ராஜினாமா செய்ய வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்
ஊழல் புகாரில் தனி செயலாளர் கைது செய்யப்பட்டு உள்ளதால் மந்திரி ஸ்ரீராமுலு ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. உக்ரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது
முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன், மருமகன் மற்றும் பேரன் ஆகியோர் பெங்களூரு வளர்ச்சி ஆணைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டத்தில் ரூ.25 கோடி லஞ்சம் பெற்றுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் அமலாக்கத்துறையில் புகார் அளித்துள்ளார். அதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயத்தில் எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு கவர்னரிடம் சமூக ஆர்வலர் கடிதம் கொடுத்துள்ளார்.
பத்ரா மேல் அணை திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதாவை சேர்ந்த எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. கூறினார். இப்போது ஊழல் புகாரில் சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் தனி செயலாளரை போலீசார் கைது செய்துள்ளனர். எடியூரப்பா மகன் விஜயேந்திரா தான் புகாரே கொடுத்துள்ளார். கர்நாடகத்தில் ஊழல் கங்கை ஆறு போல் கரைபுரண்டு ஓடுகிறது.
ராஜினாமா செய்ய வேண்டும்
இதற்கிடையே எடியூரப்பா மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு கொடுத்த கடிதத்தை கவர்னர் நிராகரித்துள்ளார். இந்த அனுமதி நிராகரிப்பு தகவலை கடிதம் கொடுத்தவருக்கு தெரிவிக்காமல் நேரடியாக போலீஸ் அதிகாரிகளுக்கு கவர்னர் தெரிவித்துள்ளார். இது சரியல்ல. கவர்னரின் பதவி காலம் 5 ஆண்டுகள் மட்டுமே.
வஜூபாய் வாலா கவர்னராக நியமிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிறது. அவருக்கு அதிகார நீட்டிப்பும் வழங்கவில்லை. ஆனால் அவர் கவர்னர் பதவியில் நீடிக்கிறார்.
ஊழல் புகார்களில் இருந்து முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளை அவர் பாதுகாக்கிறார். ஊழல் புகாரில் தனது தனி செயலாளர் கைது செய்யப்பட்டு உள்ளதால், மந்திரி பதவியை ஸ்ரீராமுலு ராஜினாமா செய்ய வேண்டும். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு உக்ரப்பா கூறினார்.
Related Tags :
Next Story