பெட்ரோல்-கியாஸ் விலை உயர்வால் குடும்பம் நடத்தவே கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது; இல்லத்தரசிகள் குமுறல்


பெட்ரோல்-கியாஸ் விலை உயர்வால் குடும்பம் நடத்தவே கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது; இல்லத்தரசிகள் குமுறல்
x
தினத்தந்தி 2 July 2021 9:01 PM GMT (Updated: 2 July 2021 9:01 PM GMT)

பெட்ரோல்-கியாஸ் விலை உயர்வால் அத்தியாவசிய தேவைகளுக்கே கடன் வாங்கும் சூழலில் சிக்கி இருப்பதாக இல்லத்தரசிகள் தெரிவித்தனர்.

ஈரோடு
பெட்ரோல்-கியாஸ் விலை உயர்வால் அத்தியாவசிய தேவைகளுக்கே கடன் வாங்கும் சூழலில் சிக்கி இருப்பதாக இல்லத்தரசிகள் தெரிவித்தனர்.
பெட்ரோல்-கியாஸ் விலை
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை போட்டிப்போட்டுக்கொண்டு உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து இருக்கிறது. நேற்று ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் 70 காசுக்கு விற்பனையானது. டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 31 காசுக்கு விற்பனையானது. இந்த நிலையில் ரூ.825-க்கு விற்பனையான கியாஸ் சிலிண்டர் ஒரே நாளில் ரூ.25 உயர்ந்து ரூ.850-க்கு விற்பனையாகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு தினசரி வாழ்வில் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது.
வி.மகாலட்சுமி
இதுகுறித்து ஈரோடு வாசுகி 4-வது வீதியை சேர்ந்த எல்.விஜயபாஸ்கர் என்பவருடைய மனைவி வி.மகாலட்சுமி கூறியதாவது:-
 பெட்ரோல் விலை உயர்வால், எங்கள் குடும்ப செலவில் கூடுதலாக தொகை செலவாகிறது. இதுபோல சமையல் கியாஸ் விலை ரூ.400-க்கும் குறைவாக இருந்தது. இப்போது சிலிண்டர் கொண்டு வருபவர் வாங்கும் கட்டணத்துடன் சேர்த்து ரூ.880 கொடுக்கிறோம். இடைப்பட்ட காலத்தில் முழு தொகையும் செலுத்தினாலும் மானியம் வங்கி கணக்கில் வரும் என்றார்கள். இப்போது வெறும் ரூ.40 மட்டுமே மானியம் என்ற வகையில் கிடைக்கிறது. பலருக்கு இந்த தொகையும் கிடைப்பது இல்லை. டீசல் விலை உயர்வால் அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து உள்ளன. மளிகைப்பொருட்கள், காய்கறிகள் என்று அனைத்தும் உயர்ந்து வருவதால் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் எங்களைப்போன்ற நடுத்தர குடும்பத்தினர் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். 
இவ்வாறு அவர் கூறினார்.
வி.உஷா
ஈரோடு கோட்டை பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த விஜயகுமார் என்பவருடைய மனைவி வி.உஷா கூறியதாவது:-
பொதுமக்களைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருவது மிகவும் பயமாக உள்ளது. நான் ஒரு தனியார் கடையில் கணக்காளராக வேலை செய்கிறேன். எனக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாதி பெட்ரோல் மற்றும் கியாசுக்கே செலவாகி விடுகிறது. குடும்பம் நடத்தவும், வீட்டு வாடகை செலுத்தவுமே முடியாத நிலை இருக்கிறது. இதற்காக மாதம் தோறும் கடன் வாங்கும் நிலை உள்ளது. பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் கடுமையாக பாதிக்கிறது.  எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எச்.மைதிலி
ஈரோடு மூலப்பட்டறை காந்திபுரம் 3-வது வீதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடைய மனைவி எச்.மைதிலி கூறியதாவது:-
கொரோனா தாக்கம் காரணமாக நாடு  முழுவதும் ஊரடங்கு     நடைமுறையில்  உள் ளது. அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. பொதுமக்கள் வருவாய் இழந்து சிரமப்பட்டு வருகிறார்கள். ஆனால் அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் பெட்ரோல் விலையை அரசு உயர்த்திக்கொண்டு போவது அச்சமாக உள்ளது. இது ஒட்டுமொத்தமாக அனைத்து தொழில்களையும் பாதிக்கும்.  எங்களைப்போன்று சிறு தொழில் செய்து வருபவர்கள் பல கடன்கள் வாங்கி இருக்கிறோம். அந்த கடன்களை திரும்ப செலுத்தவே எந்த வருவாயும் இல்லை. இப்போது குடும்பம் நடத்தவே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பிரியதர்ஷினி
ஈரோடு மேற்கு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய மனைவி எஸ்.பிரியதர்ஷினி கூறியதாவது:-
நான் ஈரோட்டில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தேன். தற்போது ஊரடங்கால் வேலை இல்லை. எனது கணவர் டெய்லர் வேலை செய்து வந்தார். அவருக்கும் இப்போது வேலை இல்லை. இந்த நிலையில் சமையல் கியாஸ் விலை உயர்வு எங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காய்கறி முதல் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்து வருவதால் ஆசைப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடக்கூட முடியாத சிரமத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் சமையல் கியாசும் விலை உயர்ந்தால் என்னதான் செய்வது. ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இருசக்கர வாகனம் ஓட்டவே பயமாக உள்ளது.  இப்படி விலை எகிறிக்கொண்டே போனால் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகத்தான் இருக்கும். ஏற்கனவே தொழில் இல்லை. வேலை இல்லை என்று கடனில்தான் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இனிமேல் வேலை கிடைத்தாலும் பெட்ரோல், கியாஸ் வாங்கவே கடன் வாங்க வேண்டியதுதான் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story