கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை நவம்பரில் பரவும் - ஜெயதேவா மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் பேட்டி


கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை நவம்பரில் பரவும் - ஜெயதேவா மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் பேட்டி
x
தினத்தந்தி 2 July 2021 9:02 PM GMT (Updated: 2 July 2021 9:02 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலை நவம்பர் மாதம் பரவும் என்று ஜெயதேவா அரசு மருத்துவமனை இயக்குனர் மஞ்சுநாத் கூறினார்.

பெங்களூரு:

  பெங்களூரு ஜெயதேவா அரசு இதயநோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குழந்தைகளுக்கு வைரஸ்

  கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையின் இறுதி நிலையில் இருக்கிறோம். கேரளா, மராட்டிய மாநிலங்களில் பாதிப்பு இன்னும் சற்று அதிகமாகவே உள்ளது. 2-வது அலை அங்கு தான் முதலில் தொடங்கியது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் கொரோனா பாதிப்பு ஏற்படும். ஆனால் அதன் தீவிரத்தன்மை குறைவாக இருக்கும். தடுப்பூசி போட்டுக் கொண்டதால், விதிமுறைகளை பின்பற்ற தேவை இல்லை என்று கருதி அலட்சியமாக இருக்கக்கூடாது.

  கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் கொரோனா 3-வது அலை விரைவாக வரும். கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. மாநிலத்தில் இதுவரை 6 சதவீத குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. குழந்தைகளில் இறப்பு விகிதம் குறைவு தான்.

அரசு அனுமதிக்கக்கூடாது

  இங்கிலாந்து, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா 2-வது அலை மற்றும் 3-வது அலைக்கு இடையில் 3, 4 மாதங்கள் மட்டுமே இடைவெளி இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். கர்நாடகத்தில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கொரோனா 3-வது அலை பரவ வாய்ப்பு உள்ளது. அதனால் வருகிற டிசம்பர் மாதம் வரை மக்கள் அதிகம் கூடும் திருவிழா, கோவில் விழா, கூட்டங்கள் போன்றவற்றை நடத்த அரசு அனுமதிக்கக்கூடாது.

  திருமண நிகழ்ச்சிகளிலும் அதிகபட்சமாக 60 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனா 4-வது அலை வருமா என்பது தெரியவில்லை. நோய் அறிகுறிகள் இருந்தால் உடனே கொரோனா பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இந்த விஷயங்களில் மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. அனைவரும் எந்த வித தயக்கமும் இன்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
  இவ்வாறு மஞ்சுநாத் கூறினார்.

Next Story