ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்காமல் மாநிலங்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது - குமாரசாமி குற்றச்சாட்டு
மாநிலங்களுக்கு உரிய ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்காமல் மத்திய அரசு ஏமாற்றுகிறது என்று குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
மத்திய அரசு கொண்டாடுகிறது
சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறைக்கு வந்து 4 ஆண்டுகள் ஆவதை பா.ஜனதா மற்றும் மத்திய அரசு கொண்டாடுகிறது. மாநிலங்களுக்கு இருக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை பறித்து, மத்திய அரசு தனது வயிற்றை நிரப்பி கொண்டது. அதனால் இதை மத்திய அரசு கொண்டாடலாம். ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களை சேர்த்துக் கொண்ட மத்திய அரசு, இழப்பீடு வழங்குவதாக உறுதியளித்தது. ஆனால் போதிய இழப்பீடு வழங்காமல் மாநிலங்களை மத்திய அரசு ஏமாற்றுகிறது. இதை மாநிலங்கள் கொண்டாட வேண்டுமா?.
கர்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ.9 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டியது நிலுவையில் உள்ளது. கொண்டாட்ட நேரத்தில் இந்த இழப்பீட்டு தொகையை ஒதுக்கி இருந்தால், கர்நாடகமும் கொண்டாடி இருக்கும். கொரோனா நெருக்கடி நேரத்தில் இழப்பீட்டை வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாநிலங்களின் வலியின் மீது மத்திய அரசு கொண்டாடுகிறது.
மக்களின் வாழ்க்கை தரம்
மாநிலங்களின் வருவாயை மத்திய அரசுக்கு திருப்பி விடுவது, நிதி உதவிக்காக மாநிலங்கள் மத்திய அரசின் முன்பு அடிமைகளை போல் நிற்பது ஆகியவை தான் இந்த ஜி.எஸ்.டி. வரி திட்டத்தின் நோக்கம். இத்தகைய அடிமை திட்டத்தை வகுத்தது காங்கிரஸ். அதை பா.ஜனதா அமல்படுத்தியது. இப்போது நிதி வேண்டும் என்று மாநிலங்கள் கை ஏந்தி நின்று கொண்டிருக்கின்றன. பெட்ரோல்-டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் சேர்க்க வேண்டாம் என போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. மாநிலங்களின் வருவாயை பறித்துள்ளது. அதனால் சாமானிய மக்களின் வாழ்க்கை தரம் மேம்பாட்டுள்ளதா?. புதிய தொழில் நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டதா?. இவை எதையும் மத்திய அரசு செய்யவில்லை. இத்தகைய ஜி.எஸ்.டி. திட்டத்தை கொண்டாட வேண்டுமா?.
இவ்வாறு குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story