தென்ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.56 கோடி போதைப்பொருள் பறிமுதல் - ஜிம்பாப்வே நாட்டு பெண் கைது
தென்ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.56 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜிம்பாப்வே நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
போதைப்பொருட்கள் கடத்தல்
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து பெங்களூருவுக்கு பெரிய அளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதே விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருட்கள் கடத்தும் கும்பலை பிடிக்க அதிகாரிகளும், போலீசாரும் நடவடிக்கை எடுத்தனர்.
ஜிம்பாப்வே பெண் கைது
அப்போது துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமானத்தில் வந்த பயணிகள், அவர்களது உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த பயணிகளிடமும் போதைப்பொருட்கள் சிக்கவில்லை. அதே நேரத்தில் ஒரு பெண்ணின் நடவடிக்கையில் மட்டும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரது பையை சோதனை செய்த போது, அதற்குள் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது அந்த பைக்குள் தனியாக பெட்டி போல அமைத்து, அதற்குள் ஹெராயின் போதைப்பொருளை அந்த பெண் பதுக்கி வைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண்ணை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், அவர் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த 35 வயது பெண் என்று தெரிந்தது.
ரூ.56 கோடி மதிப்பு
இவர், தென்ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து துபாய்க்கு வந்திருந்ததும், அங்கிருந்து பெங்களூருவுக்கு வந்திருந்ததும் தெரிந்தது. மேலும் மருத்துவம் தொடர்பான விசாவில் பெங்களூருவுக்கு வரும் போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஹெராயின் போதைப்பொருளையும் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணிடம் இருந்து 8 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் அவற்றின் மதிப்பு ரூ.56 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான பெண்ணின் பின்னணியில் பெரிய அளவில் போதைப்பொருட்கள் விற்கும் கும்பல் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான பெண்ணிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூருவில் ரூ.56 கோடிக்கு போதைப்பொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story