பெங்களூருவில் திடீர் பயங்கர சத்தம்; பொதுமக்கள் பீதி


பெங்களூருவில் திடீர் பயங்கர சத்தம்; பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 3 July 2021 2:47 AM IST (Updated: 3 July 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பயங்கர சத்தம் எழுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதா என இயற்கை பேரிடர் மையம் விளக்கம் அளித்துள்ளது.

பெங்களூரு:

பயங்கர சத்தம்

  பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயங்கர சத்தம் எழுந்தது. இது என்ன சத்தம் என்று தெரியாத மக்கள், நில நடுக்கமாக இருக்குமோ என கருதி பீதி அடைந்தனர். இதுகுறித்து இந்திய விமானப்படை, தங்களின் சூப்பர் சோனிக் அதாவது அதிவேகமாக செல்லக்கூடிய போர் விமானம் ஒன்று பெங்களூரு நகரின் மேலே பறந்ததாகவும், அது எழுப்பிய சத்தம் தான் என்றும் கூறியது. அதன் பிறகு அந்த மர்ம சத்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

  இந்த நிலையில் தலைநகர் பெங்களூருவில் நேற்று நண்பகல் 12 மணி முதல் 12.45 மணிக்குள் நகரின் பல்வேறு இடங்களில் ‘டம்' என்று பயங்கர சத்தம் உணரப்பட்டது. அதாவது, கெங்கேரி, ராஜராஜேஸ்வரிநகர், விஜயநகர், ஜெயநகர், ஜே.பி.நகர், உத்தரஹள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த பயங்கர சத்தத்தை உணர்ந்து நில நடுக்கமாக இருக்குமோ என்று பீதி அடைந்தனர். வானில் வட்டமடித்து கொண்டிருந்த பறவை இனங்கள், வழக்கத்திற்கு மாறான சத்தத்தை கேட்டு நாலாபுறமும் சிதறி விரைந்து பறந்து சென்றன.

விமானம் பறக்கவில்லை

  இது கடந்த முறையை போல் போர் விமானம் எழுப்பிய ஒலியாக இருக்கலாம் என்று மக்கள் சிலர் கருதினர். மற்ற சிலர்கள் லேசான நில நடுக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று பேசிக்கொண்டனர். ஆனால் எதனால் அந்த ஒலி எழுந்தது என்று யாராலும் உறுதியாக கூற முடியவில்லை. இதுகுறித்த தகவல் அறிந்த விமானப்படை அதிகாரிகள், பெங்களூருவில் பயங்கர சத்தம் உணரப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்தில் எங்கள் விமானம் எதுவும் பறக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

  இதுகுறித்து கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கெங்கேரி, ராஜராஜேஸ்வரிநகர், விஜயநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் இன்று (அதாவது நேற்று) நண்பகல் 12 மணி முதல் 12.45 மணிக்குள் பயங்கர சத்தத்தை உணர்ந்தாக எங்களிடம் தகவல் தெரிவித்தனர். நாங்கள் நில நடுக்கம் பதிவாகும் கருவியை சோதனை செய்து பார்த்தோம். அதில் நிலம் நடுக்கம் ஏற்பட்டதற்கான எந்த தகவலும் பதிவாகவில்லை" என்றார்.

தகவல்களை பதிவிட்டனர்

  இந்த பயங்கர சத்தம் குறித்து பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பதிவிட்டனர். இது ஏராளமானவர்கள் டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தங்களின் கருத்துகளை அதிகளவில் பகிர்ந்தனர். இது நிலநடுக்கமாக இருக்கலாம் என்றும் சிலர் கருத்துகளை தெரிவித்தனர்.

Next Story