எடியூரப்பாவின் மகன் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் - மந்திரி ஸ்ரீராமுலு உதவியாளரிடம் போலீஸ் விசாரணை


எடியூரப்பாவின் மகன் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாக புகார் - மந்திரி ஸ்ரீராமுலு உதவியாளரிடம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 July 2021 2:50 AM IST (Updated: 3 July 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

எடியூரப்பா மகனின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக மந்திரி ஸ்ரீராமுலுவின் உதவியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவருக்கு குரல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதுபற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:
  
எடியூரப்பாவின் மகன்

  கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. பத்ரா மேல் அணைகட்டும் திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகனும், பா.ஜனதா துணை தலைவருமான விஜயேந்திராவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார். மேலும் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எம்.எல்.சி.யான விஸ்வநாத்தும் இந்த முறைகேடு குறித்து விஜயேந்திரா மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

  இந்த நிலையில், தன்னுடைய பெயரை பயன்படுத்தி அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து தருவதாகவும், அரசு அதிகாரிகளை அரசின் முக்கியத்துறைகளுக்கு பணி இடமாற்றம் செய்ய சிபாரிசு பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்று மோசடி நடப்பதாகவும், இந்த விவகாரத்தில் சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் உதவியாளர் ராஜண்ணாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா புகார் அளித்திருந்தார்.

ஸ்ரீராமுலுவின் உதவியாளர்

  இதுதொடர்பாக பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். அதே நேரத்தில் மந்திரி ஸ்ரீராமுலுவின் உதவியாளர் ராஜண்ணா, சிலரிடம் செல்போனில் பேசும் ஆடியோக்களும் வெளியானது. அதாவது நீர்ப்பாசனத்துறையில் அரசு பணிகளை பெற ஒப்பந்தம் வாங்கி தருவதாகவும், தனக்கு முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா மற்றும் மந்திரிகளை தெரியும் என்று ராஜண்ணா பேசும் அந்த ஆடியோக்கள் உள்ளது.

  இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு மத்திய குற்றப்பிரிவு போலீசார், பெங்களூரு சாளுக்கியா சர்க்கிளில் வைத்து ராஜண்ணாவை கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அவரிடம் விஜயேந்திரா, பிற மந்திரிகளின் பெயர்களை பயன்படுத்தி அரசு ஒப்பந்த பணிகளை பெற்றுக் கொடுக்க பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றார்கள்.

குரல் பரிசோதனை

  இந்த நிலையில், 2-வது நாளாக நேற்று காலையிலும் ராஜண்ணாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனால் தற்போது வெளியாகி உள்ள ஆடியோக்களில் பேசி இருப்பது நான் அல்ல என்று போலீசாரிடம் ராஜண்ணா உறுதியாக தெரிவித்தார். இதையடுத்து, ராஜண்ணாவுக்கு குரல் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அவருக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த குரல் பரிசோதனையும், ஏற்கனவே வெளியாகி இருந்த ஆடியோக்களையும் தடயவியல் ஆய்வுக்காக போலீசார்அனுப்பி வைத்துள்ளனர்.

  பின்னர் ராஜண்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்தி விட்டு, அவரை விடுவித்தனர். நேற்று முன்தினம் இரவு ராஜண்ணா கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் நேற்று அவர் விடுவிக்கப்பட்டார். விஜயேந்திரா கொடுத்த புகாரின் பேரில் ராஜண்ணாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அவரை கைது செய்யவில்லை என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீராமுலு குற்றச்சாட்டு

  இதற்கிடையில், தனது பெயரை பயன்படுத்தி ராஜண்ணா மோசடியில் ஈடுபட்டதாக கூறி போலீசில் புகார் அளிக்கும் முன்பாக, விஜயேந்திரா தன்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று மந்திரி ஸ்ரீராமுலு முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், முதல்-மந்திரி எடியூரப்பாவையும் நேற்று காலையில் சந்தித்து பேசினார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து ராஜண்ணாவை நேற்று முன்தினமே போலீசார் கைது செய்திருந்தாலும், அவரிடம் விசாரித்துவிட்டு நேற்று விடுவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  விஜயேந்திரா, பிற மந்திரிகள் பெயரை பயன்படுத்தி ராஜண்ணா பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுவது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பெங்களுரு மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

குரல் பதிவு தடயவியல் ஆய்வுக்கு....

  பா.ஜனதா துணை தலைவர் விஜயேந்திரா கொடுத்த புகாரின் பேரில் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) ராஜண்ணாவை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் விசாரணை அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர் நாகராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரீஷ், பிரசாந்த் பாபு ஆகியோர் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர். ராஜண்ணாவின் குரல் பதிவு பெறப்பட்டு தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது குரல் பதிவும், ஏற்கனவே வெளியான ஆடியோக்களில் இருக்கும் குரல் பதிவும் ஒரே மாதிரியாக உள்ளதா? என்பதை கண்டறிய தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

  இந்த வழக்கு குறித்து விசாரணை அதிகாரி தொடர்ந்து விசாரித்து வருகிறார். ராஜண்ணாவிடம் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. மீண்டும் சம்மன் அனுப்பினால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ராஜண்ணாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  இவ்வாறு அவர் கூறினார்.

நான் எந்த தவறும் செய்யவில்லை

முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பெயரை பயன்படுத்தி மந்திரி ஸ்ரீராமுலுவின் உதவியாளர் ராஜண்ணாவை பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை போலீசார் விடுவித்தனர். இதுகுறித்து அவர் நேற்று முகநூலில் ஒரு ஆடியோ வெளியிட்டு இருந்தார். அதில், "மந்திரி ஸ்ரீராமுலுவிடம் 20 ஆண்டாக உதவியாளராக இருந்து வருகிறேன். இதுவரை அவரது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக நடந்ததில்லை. இனியும் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டேன். 

தற்போது வெளியாகி உள்ள ஆடியோவில் இருக்கும் குரல் என்னுடையது அல்ல. போலீசாரிடமும் இதனை தெரிவித்துள்ளேன். அந்த குரல் என்னுடைய தான் என்று தவறாக புரிந்து கொண்டு விஜயேந்திரா புகார் அளித்துள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரிடமும் பணம் வாங்கவில்லை. இந்த சம்பவத்தால் நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்" என்றார்.

3 ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பு

மந்திரி ஸ்ரீராமுலுவின் உதவியாளர் ராஜண்ணா, ஒப்பந்ததாரர்களிடம் விஜயேந்திரா, மந்திரிகளின் பெயரை பயன்படுத்தி பேசுவது போல் 3 ஆடியோக்கள் வெளியாகி உள்ளது. முதல் ஆடியோவில் ஒரு ஒப்பந்ததாரரிடம் ரூ.75 லட்சம் கேட்பதும், 2-வது ஆடியோவில் மற்றொரு நபரிடம் ரூ.1 கோடி கேட்பதுபோன்றும், 3-வது ஆடியோவில் ரூ.3 கோடி கொடுக்கும்படி ராஜண்ணா கேட்பது போன்றும் ஆடியோக்களில் இடம் பெற்றுள்ளது. 

மேலும் விஜயேந்திராவுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் ராஜண்ணா பேசுவதும் ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. தற்போது அந்த 3 ஆடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதுடன் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story